கொழும்பு: இலங்கை அணியின் லெக் பிரேக் பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வான்டேர்சே இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஆறு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணியின் தோல்விக்கு அவரே முக்கிய காரணமாக இருந்தார். அவரது சிறப்பான செயல்பாடுகளை அடுத்து அவர் யார்? என பலரும் தேடி வருகின்றனர்.
அவர் இலங்கை அணிக்காக மிகக் குறைந்த போட்டிகளிலேயே விளையாடி இருக்கிறார். இந்தியா – இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் 34 வயதான அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் இந்திய அணி பேட்டிங் செய்தபோது அபாரமாக பந்து வீசினார்.
ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் ஜெஃப்ரி வான்டேர்சே பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அதை தொடர்ந்து சுப்மன் கில், சிவம் துபே, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் என இந்திய அணியின் முதல் ஆறு விக்கெட்களை ஜெஃப்ரி வான்டேர்சே வரிசையாக வீழ்த்தி அதிர வைத்தார். அதன் பின் தடுமாறிய இந்திய அணி 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிறப்பாக பந்து வீசிய ஜெஃப்ரி வான்டேர்சே 10 ஓவர்களில் 33 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டிகளில் மிகச் சிறந்த ஐந்தாவது பந்துவீச்சாகும்.
ஜெஃப்ரி வான்டேர்சே கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகம் ஆகி இருந்தார். அவர் இதுவரை 14 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி 2 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். 23 ஒரு நாள் போட்டிகளில் 33 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்திய அணிக்கு எதிராக அவர் 33 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே அவரின் சிறந்த சர்வதேச பந்துவீச்சாகும்.
நன்றி mykhel