Michaelpatti schoolgirl death case- தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் தனியார் கிறிஸ்தவப் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்த மாணவியின் தற்காலைக்கு மத மாற்ற முயற்சி காரணமல்ல என சிபிஐ தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் தனியார் கிறிஸ்தவப் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்த மாணவியின் தற்காலைக்கு மத மாற்ற முயற்சி காரணமல்ல என சிபிஐ தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி கிராமத்திலுள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். திடீரென விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற அந்த மாணவி, 2022 ஜனவரி மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, பள்ளி நிர்வாகி சகாயமேரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ’மாணவி உயிரிழப்புக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை மதம் மாறுமாறு யாரும் வற்புறுத்தவில்லை. எனவே, இந்த வழக்கில் என் மீது சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் முகையதீன், இந்த வழக்கு தொடர்பாக 141 பேரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. 265 ஆவணங்களும் 7 பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன
மாணவியை மத மாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை. அதேநேரம், நன்றாகப் படித்த மாணவியை பிற வேலைகளை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கின்றனர். அதனால்தான் , அவர் கல்வியில் பின்தங்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற காரணங்களால்தான் அவர் தற்கொலை செய்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கூடாது என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 24-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.
நன்றி indianexpress