medkkad
vaiko

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு புதியதாக அணை கட்ட ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதே கேள்விக்குறியாகிவிடும் என மறுமலர்ச்சி திமுகவின் பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுமே கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிகளை ஒற்றுமையாக எதிர்க்கின்றன என்றார் வைகோ. மேலும் மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக வரும் 14-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மதிமுக போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்துள்ளது.

சென்னையில் மதிமுகவின் 30-வது பொதுக்குழு நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மதிமுக எம்பிக்களான பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் மதிமுக தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். சென்னை பொதுக் குழு கூட்டத்தில் மொத்தம் 22 தீர்மானங்களை நிறைவேற்றியது மதிமு.க.

லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி, துரை வைகோவின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தும் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மத்திய பட்ஜெட்டைக் கண்டித்தும் நீட் தேர்வுக்கு எதிராகவும் சென்னையில் வரும் 14-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: மத்திய பட்ஜெட் என்பது கானல் நீர்தான். தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசுதான் தீர்வு காண வேண்டும். அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது. இது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி. காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு, மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுப்போம். கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை அனுமதிக்க முடியாது. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு மத்திய அரசு மறைமுகமாக உதவி செய்கிறது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் மேகதாது அணை கட்டுவதை கடுமையாக எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை மீறி மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் இந்திய நாட்டின் ஒருமைப்பாடு என்பதே கேள்விக்குறியாகிவிடும் என எச்சரிக்கிறோம். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

நன்றி oneindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *