கிரிக்கெட் நடுவர் டோனி டி நோப்ரேகாவுக்கு பிளாஸ்டிக் கவசம் வழங்கப்படாத சூழலில், பேட்ஸ்மேனால் ஸ்ட்ரைட் டிரைவ் ஆடப்பட்ட பந்து அவரை நோக்கி பறந்து வந்து அவரது முகத்தை பதம் பார்த்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் வீரர்களுக்கு இணையான முக்கியத்துவம் பெறுபவர்களாக நடுவர்கள் உள்ளார்கள். அவர்கள் சொல்லும் முடிவே இறுதியானதாக இருக்கிறது. இதில் கள நடுவர்கள் மற்றும் களத்திற்கு வெளியே மூன்றாவது நடுவர் என ஒரு போட்டியில் 3 நடுவர்கள் பங்கேற்கிறார்கள். 

இவர்களில் 3-வது நடுவர் பாதுகாப்பான அறையில் இருப்பார். அதே நேரத்தில் களத்தில் இருக்கும் இருவரில் ஒருவர் பேட்ஸ்மேனுக்கு நேராக அடுத்த முனையில் இருக்கும் ஸ்டம்புக்கு  பின்புறம் நிற்பார். மற்றொருவர், ஸ்ட்ரைக்கில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு லெக் திசையில் நிற்பார். 

கள நடுவர்கள் கிரிக்கெட் போட்டிகளின் போது, தங்களது மனதிற்குள் ஒருவித போராட்டத்துடன் இருப்பார்கள். குறிப்பாக, பேட்மேனுக்கு எதிராக நிற்கும் நடுவர் பந்து எப்போது அவரை நோக்கி வரும் என உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் இருப்பார். சில நேரங்களில் பேட்ஸ்மேன்கள் ஸ்ட்ரைட் திசையில் அடிக்கும் பந்துகள் நடுவர்களை பதம் பார்க்கும். 

அதன் காரணமாக, தற்போது சர்வதே மற்றும் ஐ.பி.எல் போன்ற முக்கிய போட்டிகளில் கள நடுவர்களை நோக்கி வரும் பந்தை மறைக்க கண்ணாடி பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட கவசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கவசத்தை நடுவர்கள் தங்களது கையில் அணிந்திருப்பார்கள். ஆனால், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் நடுவர்களை இதுபோன்ற கவசம் வழங்கப்படுதில்லை. 

இந்நிலையில், வெஸ்ட் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நடுவர் டோனி டி நோப்ரேகாவுக்கு பிளாஸ்டிக் கவசம் வழங்கப்படாத சூழலில், பேட்ஸ்மேனால் ஸ்ட்ரைட் டிரைவ் ஆடப்பட்ட பந்து அவரை நோக்கி பறந்து வந்து அவரது முகத்தை பதம் பார்த்துள்ளது. பந்து பலமாக தாக்கியதில் அவரது முகம் பார்க்கவே கொடூரமாக மாறியுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.  

நடுவர் டோனி டி நோப்ரேகா வெஸ்ட் ஆஸ்திரேலிய புறநகர் டர்ஃப் கிரிக்கெட் சங்கத்தில் (WASTCA) சார்லஸ் வெர்யார்ட் ரிசர்வ் பகுதியில் உள்ள நார்த் பெர்த் மற்றும் வெம்ப்லி மாவட்டங்களுக்கு இடையேயான மூன்றாவது கிரேடு போட்டியில் நடுவராக பங்கேற்று இருந்தார். இந்தப் போட்டியின் போது தான் அவருக்கு காயம் ஏற்பட்டது.

“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டோனிக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை. அதனால், அறுவை சிகிச்சை தேவையில்லை. தற்போது மருத்துவர்கள் அவரைக் கண்காணிப்பில் வைத்துள்ளனர். இந்த கொடூரமான சம்பவத்தில் இருந்து டோனி விரைவில் குணமடைய வாழ்த்துவோம், மேலும் அவர் விரைவில் வருவார் என எதிர்பார்க்கிறோம். தோழரே நடுவர்கள் குழு உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும். எனவே, ஓய்வெடுங்கள் டோனி.” வெஸ்ட் ஆஸ்திரேலியா நடுவர்கள் சங்கம் அதன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

டோனியைப் போலவே, நடுவர்களுக்கு கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கிய சம்பவங்கள் கடந்த காலங்களிலும் அரங்கேறியுள்ளன. 2019 ஆம் ஆண்டில், வேல்ஸில் நடந்த உள்ளூர் போட்டியின் போது 80 வயதான நடுவர் ஜான் வில்லியம்ஸ் பந்து தாக்கியதில் பரிதமாக உயிரிழந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேலிய நடுவர் ஹில்லெல் ஆஸ்கார், பந்து ஸ்டம்பிலிருந்து பட்டு அவரது தலையில் தாக்கியதால் உயிரிழந்தார். 

சர்வதேச நடுவர்கள் போட்டிகளில் தொப்பிகள் அணிந்து கொண்டிருந்த நிலையில், ஆஸ்திரேலிய நடுவர் ஜெரார்ட் அபூட் ஆஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் போட்டிகளில் நடுவராக இருந்தபோது ஹெல்மெட் அணிந்திருந்தார். மற்றொரு ஆஸ்திரேலிய சர்வதேச நடுவர் புரூஸ் ஆக்சன்ஃபோர்ட் பிளாஸ்டிக் முன்கை கவசத்தை அணிந்திருந்தார். 

எட்டு மகளிர் டெஸ்ட் போட்டிகள் உட்பட 70 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக இருந்த ஆக்சன்ஃபோர்ட், இந்த யோசனையைப் பற்றி முன்பே பகிர்ந்து கொண்டார். “இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் டெல்லியில் எனது ஹோட்டல் படுக்கையில் படுத்திருந்தேன். எனக்கு இந்த யோசனை வந்தது. என்னுடைய சக நடுவர் ஜான் வார்டு இந்தியாவில் பணியில் இருந்தார், அவர் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். அவர் மோசமான நிலையில் இருந்தார். எங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பந்தால் ஆபத்து இருக்கிறது. அப்படிபட்ட இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.

பந்து எப்போதும் கடினமாகவும் வேகமாகவும் திரும்பி வருகிறது என்பதைப் பற்றி நாங்கள் நீண்ட காலமாக பேசிக்கொண்டிருக்கிறோம். அப்போது, பாதுகாப்புக்கு ஹெல்மெட் பற்றி பேசப்பட்டது. ஆனால் நான் அதை அணிய விரும்பவில்லை. ஏனெனில், அது எனது புறப் பார்வை மற்றும் செவித்திறனைக் கட்டுப்படுத்தும் என்று நினைத்தேன். மேலும், எனக்கு முகத்தில் தான் அடிபட போகிறது என்றும் நான் நினைக்கவில்லை. இயற்கையான விஷயம் என்னவென்றால், உங்கள் கைகள் மூலம் முகத்தை மறைப்பீர்கள். பிறகு எதாவது ஒருபுறமாக தலையத் திருப்புவீர்கள். அப்போது நான் நினைத்தேன், ‘நீட்டிக்கப்பட்ட கைக் கவசம் போன்ற ஏதாவது ஒன்று கேடயமாகச் செயல்படலாமே?’ என்று அவர் முன்னதாக டெய்லி மெயிலிடம் கூறியிருந்தார்.

Nandri indianexpress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *