காலநிலை மாற்றத்திற்கு சுற்றுசூழல் மாசும் முக்கியமான காரணம் என்பதால், அதனை எதிர்கொள்ளும் விதத்தில் வாகன எரிபொருளாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சர்வதேச அளவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அனைத்து நாடுகளும் மக்களை ஊக்குவித்துவருகின்றன.
பல்வேறு சலுகைகள், தள்ளுபடி என மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து மின்சார வாகனங்களை வாங்க ஊக்கம் அளித்து வந்தாலும், மக்களிடையே மின்சார வாகனங்கள் வாங்குவதில் தயக்கம் இருந்து வந்த நிலையில், மக்களின் தயக்கம் இன்னும் மாறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மின்சார வாகனங்களை வாங்க தயங்குவது இந்தியர்கள் மட்டுமல்ல, சர்வதேச நாடுகள் அனைத்திலும் மின்சார வாகனங்களை வாங்குவதற்கான விருப்பங்கள் குறைந்துக் கொண்டே வருகிறது என்பதை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று பட்டவர்த்தனமாக வெளிபப்டுதியுள்ளது.
அதற்கான காரணங்கள், மின்சார வாகனத்திற்கான முன் செலவுகள், சார்ஜிங் உள்கட்டமைப்புகள் பற்றாக்குறை என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ளது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்திலேயே (ஜனவரி 2024) ரிவியன் மற்றும் லூசிட் போன்ற மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் 85 சதவிகிதம் சரிந்ததை அடுத்து, டெஸ்லா உட்பட பல நிறுவனங்களும் நம்ப முடியாத அளவு தள்ளுபடி மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கத் தொடங்கின. இதற்குப் பிறகும் மின்சார வாகனம் வாங்கும் விருப்பம் மக்களிடையே அதிகரிக்கவில்லை என்பதை அண்மை ஆய்வு நிரூபிக்கிறது.
நன்றி zeenews