புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யூஏ) விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஏஓ) தற்காலிகக் குழுவை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் எழுப்பப்பட்டது. அவருக்கு எதிராக சாக்சி மாலிக் உள்ளிட்ட 6 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி இருந்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தனர். இதையடுத்து, டெல்லி போலீஸார் பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரிஜ் பூஷண்சிங்கின் ஆதரவாளர்களே அதிகம்வெற்றி பெற்றனர். ஆனால் விதிகளின்படி தேர்தல் நடைபெறாததால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை மத்திய அரசு சஸ்பெண்ட்செய்தது. மேலும் தற்காலிகக் குழுவை அமைத்து மல்யுத்த கூட்டமைப்பு விவகாரம், நிர்வாகிகள் தேர்தல் விவகாரத்தை கவனிக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்திய ஒலிம்பிக் சங்கம்,தற்காலிகக் குழுவை அமைத்தது.
இதனிடையே இந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் சஸ்பெண்டை, உலக மல்யுத்த சம்மேளனம் (யூடபிள்யூடபிள்யூ) ரத்து செய்தது.இதைத் தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட தற்காலிக் குழுவும் கலைக்கப்பட்டது.
இதை எதிர்த்து மல்யுத்த வீரரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனை வினேஷ் போகத், சாக்சி மாலிக், அவரது கணவர் சத்யவர்த் காதியான் உள்ளிட்டோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.
இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த தற்காலிகக் குழு மீண்டும் செயல்படவேண்டும் என்றும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை தற்காலிகக் குழுவே கவனிக்கவேண்டும் என்றும் நீதிபதி சச்சின் தத்தா தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் விவகாரம் தொடர்பாக உலக மல்யுத்த சம்மேளனம் கொண்டிருக்கும் கவலையை போக்கும் வகையில் தற்காலிகக் குழு செயல்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
நன்றி hindutamil