“மனித மூளையுடன் வரும் ரோபோ..” பகீர் கண்டுபிடிப்பு.. இந்த சீனா அடங்காது போலயே.. இது ஏன் ரொம்ப ஆபத்து
பெய்ஜிங்: இந்த காலத்தில் ரோபோ தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோக்கள் ரொம்பவே முக்கியமானதாக மாறியுள்ளது. இந்தச் சூழலில் ஏஐ மாடல் ரோபோக்களை தூக்கிச் சாப்பிடும் வகையில், சீன ஆய்வாளர்கள் மனித மூளையுடன் கூடிய அதிசயமான ரோபோக்களை உருவாக்கியுள்ளனர். அது குறித்து நாம் பார்க்கலாம்.
என்ன தான் இப்போது ஏஐ டிரெண்டிங்கில் இருந்தாலும் கூட மனிதர்களின் நுண்ணறிவு அளவுக்கு அவை சிறப்பாகச் செயல்பட முடியாது.. இதனால் ஆய்வாளர்கள் இப்போது வேறு ரூட்டில் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
ரோபோ: அதாவது ரோபோக்களுக்கு மனித மூளைகளையே ஆய்வாளர்கள் வழங்கியுள்ளனர். சீனாவில் உள்ள டியான்ஜின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தான் மனித மூளை செல்களைப் பயன்படுத்திச் செயல்படும் ரோபோக்களை உருவாக்கி உள்ளனர். உருவத்தில் மட்டுமின்றி மூளையும் கூட இது மனிதனின் மூளையையே கொண்டு இருக்கிறது. ஏதோ சினிமா படம் போல இது இருந்தாலும் இதைச் சீன ஆய்வாளர்கள் நிஜத்தில் செய்து காட்டியுள்ளனர். மனித மூளையின் செல்களை கொண்ட இந்த ரோபோ வரும் காலத்தில் மிகப் பெரிய மாற்றத்திற்கு வித்திடும் என்றே தெரிகிறது. இது அறிவியல் உலகில் மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதை brain on a chip என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது முதலில் மனித மூளை செல்களை உருவாக்கப் பயன்படுத்த இருந்த ஸ்டெம் செல்களை இந்த மூளைக்குப் பயன்படுத்தியுள்ளனர்.
செல்கள்: இந்த செல்கள் சிப்புடன் இணைக்கப்பட்டு இருக்கும். இதன் மூலமாகவே ரோபோக்கள் பல்வேறு தகவல்களை பிராசஸ் செய்து பணிகளை மேற்கொள்கிறது. இந்த அமைப்பை வைத்தே நடப்பது முதல் சுற்றி இருக்கும் பொருட்களைப் புரிந்துகொள்வது வரை அனைத்தையும் இந்த ரோபோக்கள் மேற்கொள்கிறது. இந்த மனித மூளையைக் கொண்ட ரோபோக்கள் வழக்கமான ரோபோக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. வழக்கமான ரோபோக்கள் ஏற்கனவே தங்களிடம் இருக்கும் பிரோகிராம்களை தான் நம்பி இருக்கும். ஆனால், இந்த புதிய வகை ரோபோக்களுக்கு மனித மூளை இருப்பதால் அதை வைத்து புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுமாம். மேலும், சுற்றி இருக்கும் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளவும் இந்த மூளை தான் ரோபோக்களுக்கு பயன்படுகிறது.
மனித மூளை செல்கள்: தடைகளைத் தவிர்க்கவும், எங்குச் செல்ல வேண்டும் என்பதற்குப் பாதை காட்டவும், கை அசைவுகளை நிர்வகிக்கவும் இந்த மனித செல்களே ரோபோக்களுக்கு பெரியளவில் உதவுகின்றன
இந்த ரோபோ உயிரியல் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவை மட்டுமின்றி அது கம்யூட்டர் தொழில்நுட்பத்தின் ஒரு பாய்ச்சல் என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். வழக்கமான ஏஐ மாடல்கள் அல்காரிதம்கள் மற்றும் டேட்டா பிராசஸிங்களை தான் பெரும்பாலும் நம்பி உள்ளன. இது மேம்பட்ட தொழில்நுட்பம் தான் என்றாலும் மனித மூளை செல்களின் கற்றல் வேகம் மற்றும் உள்ளுணர்வு திறன்களுக்கு இது ஈடாகாது. மறுபுறம் இந்த வகை மனித மூளை கொண்ட ரோபோக்கள் குறைந்தபட்ச சக்தியைப் பயன்படுத்தி விரைவாகக் கற்றுக் கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எச்சரிக்கை: சுமார் 8 லட்சம் மூளை செல்களை ஒரு சிப்பில் வளர்த்து, அதைத் தான் இந்த ரோபோ மீது பொருத்தியுள்ளனர். மனித நியூரான்களுக்கு ஏஐ மாடல்களை விட மிக வேகமாகக் கற்றுக்கொள்ளும் ஆற்றல் இருப்பதாகவே ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.. இவை மருத்துவத் துறையில், குறிப்பாக நரம்பியல் சிகிச்சைக்கும் பெரியளவில் பலன் தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஒரு தரப்பினர் இதுபோன்ற விபரீத ஆய்வுகள் வேண்டாம் என எச்சரிக்கிறார்கள். மனித மூளை பயன்படுத்தும் போது அவை எளிதாக மனிதர்களை மிஞ்சும் திறனைப் பெற்றுவிடும். அது மனிதக் குலத்திற்கே ஆபத்தில் சென்று முடியலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
நன்றி oneindia.com