kolkata

கொல்கத்தா: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக காவல் துறையை சேர்ந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரது சிபிஐ காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நிராகரித்த நீதிமன்றம், சஞ்சய் ராயை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஸிடம் சிபிஐ அதிகாரிகள் இதுவரை 88 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். அவரது பதில்கள் திருப்திகரமாக இல்லை. எனவே அவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து அவரிடம் நேற்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஹரிஷ் டாண்டன், ஹிரண்மோய் பட்டாச்சார்யா ஆகியோர் வழக்கை விசாரித்தனர். அப்போது நிதி முறைகேடு தொடர்பான வழக்கையும் சிபிஐ விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட இரவில் அவரோடு 4 பயிற்சி மருத்துவர்கள் பணியில் இருந்து உள்ளனர். அவர்கள் 4 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கும் விசாரணை நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

வழக்கு விசாரணை குறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் அதிகாலை4 மணி அளவில் சஞ்சய் ராய் நுழைந்துள்ளார். சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு அவர் வெளியே சென்றுள்ளார். பெண் மருத்துவரை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் அப்போதைய முதல்வர் சந்தீப் கோஸ், ஆரம்பம் முதலே கொலையை மூடி மறைக்க முயற்சி செய்துள்ளார். அவரது தரப்பில் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகாலை 5 மணிக்கே மருத்துவமனையின் காவலாளி ஒருவர், பெண் மருத்துவரின் உடலை பார்த்து அப்போதைய முதல்வர் சந்தீப் கோஸுக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப் படுகிறது. சந்தீப் கோஸும், 4 பயிற்சி மருத்துவர்களும் தடயங் களை அழித்தனரா, கொலையில் அவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய அனைவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.

வேவு பார்த்த சஞ்சய் ராய்: கொலையாளி சஞ்சய் ராய் மிக நீண்ட காலமாக பெண் மருத்துவரை வேவு பார்த்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 8-ம் தேதி பெண் மருத்துவர் பணியில் இருந்தபோது, சஞ்சய் ராய் அவரை நீண்ட நேரம் வெறித்து பார்த்துள்ளார். இதற்கான சிசிடிவி ஆதாரம் கிடைத்திருக்கிறது. இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி hindutamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *