BRUEI

புருனே சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோதி, செப்டம்பர் 3-ம் தேதி புருனே சென்றார்.

நேற்று புருனேவில் உள்ள உமர் அலி சைபுதீன் மசூதிக்கு சென்ற மோதி, செப்டம்பர் 4-ஆம் தேதி புருனேவின் சுல்தான் ஹசனல் வோல்கியாவை சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் புருனே நாடு பற்றி, 2023-ஆம் ஆண்டு வெளியான இந்த கட்டுரை தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றாக இருந்தாலும் சரி, யுக்ரேனில் நடந்த போராக இருந்தாலும் சரி, அவை ஆசியாவின் இந்த சிறிய நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கவில்லை.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் கடன் பெருமளவில் அதிகரித்துள்ளது. ஆனால் புருனேயில் எல்லாம் கட்டுக்குள் உள்ளது.

கொரோனா தொற்றுநோயை சமாளிக்க பல நாடுகள் தங்கள் செலவுகளை அதிகரிக்க வேண்டியிருந்தது. திடீர் பிரச்னை காரணமான செலவுக்கு அவற்றிடம் பட்ஜெட் இல்லை. கோவிட்-19 உலகப் பொருளாதாரத்தின் மீது மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

உலகளவில் விலைவாசி உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் இந்த தொற்றுநோய்க்கான செலவுதான்.

ஆனால் இந்த எல்லா சவால்களிலிருந்தும் விலகி, புருனேயில் எந்த பிரச்னையும் இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது இந்த நாட்டில் 1.9% கடன் மட்டுமே உள்ளது. இதுவே உலகின் மிகக் குறைந்த கடன் தொகையாகும்.

ஆனால் புருனேயின் பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது என்பது இதன் பொருள் அல்ல.

பல வளரும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது கடன் குறைவாக உள்ளது. ஏனெனில் இந்த நாடுகளில் செல்வம் மற்றும் கடன் இரண்டுமே குறைவாக உள்ளன.

இருப்பினும், புருனேயின் விஷயத்தில் அப்படி இல்லை.

பெட்ரோ ஸ்டேட் மற்றும் அபரிமிதமான செல்வம்

புருனேயில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உலகின் வளமான நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது. இதற்குக் காரணம் இங்குள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு.

“புருனே ஒரு பெட்ரோ நாடு. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 90 சதவிகிதம் ஆகும்.”என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸின் பேராசிரியர் உல்ரிக் வால்ஸ் கூறுகிறார்.

2017 ஆம் ஆண்டின் இறுதியில், புருனேயில் ஒரு பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருந்தது. அதேபோல், அங்கு 2.6 டிரில்லியன் கன மீட்டர் எரிவாயு இருந்தது என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

தென்கிழக்கு ஆசியாவில் புருனேய் தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த நாடு மலேஷியா மற்றும் இந்தோனேஷியாவுடன் தனது எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.

சுல்தான் ஹசனல் வோல்கியா மற்றும் அவரது அரச குடும்பத்தினரிடம் அபரிமிதமான செல்வம் உள்ளது.

குடிமக்களிடமிருந்து வருமான வரி வசூலிக்காத பொதுநல அரசு

புருனேயின் குடிமக்கள் எந்த வருமான வரியும் செலுத்துவதில்லை. அரசு இலவச கல்வியை அளிக்கிறது. மருத்துவ சேவைகளும் இலவசம்.

நாட்டின் தலைநகரான பந்தர் செரி பகாவனுக்குச் சென்றவர்கள், இது பாதுகாப்பான, சுத்தமான, அமைதியான இடம் என்று கூறுகிறார்கள்.

இது தவிர நாட்டின் மன்னர் அதாவது சுல்தான் தனது குடிமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தேவைப்படுவோருக்கு அவ்வப்போது வீட்டு மனைகள் மற்றும் ஆயத்த வீடுகளையும் வழங்குகிறார்கள்.

மக்கள்தொகை அடிப்படையில் இது ஒரு சிறிய நாடு. இங்கு சுமார் ஐந்து லட்சம் பேர் வசிக்கின்றனர். மேலும் இந்த மக்கள்தொகை நாட்டின் ஒரு சிறிய பகுதியில் குடியேறியுள்ளது.

புருனேயின் கடன் குறைவாக இருப்பதற்குக் காரணம் பெட்ரோலியம் பொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கும் பணம்.

எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் கிடைக்கும் வருமானம் காரணமாக, நாட்டில் பெரும் பண இருப்பு உள்ளது. இந்தப் பணத்தைக் கொண்டு நாட்டின் ஆட்சியாளர் சிறுசிறு பற்றாக்குறைகளை ஈடுகட்டிக் கொண்டே இருக்கிறார். அவர்கள் கடன் வாங்க வேண்டிய அவசியமே இல்லை.

புருனேயின் பொருளாதாரம் மிகவும் சிறியது. முழு பிராந்தியத்திலும் இதற்கு எந்த செல்வாக்கும் இல்லை. இந்த நாட்டின் முக்கியத்துவம் அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களால் மட்டுமே உள்ளது.

“எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியால், நாட்டின் நடப்பு கணக்கு உபரியில் உள்ளது. அதாவது இந்த நாடு கடன் வாங்கியதை விட மற்ற நாடுகளுக்கு அதிக கடன்களை வழங்கியுள்ளது,” என்று பேராசிரியர் வால்ஸ் கூறுகிறார்,

உலகிலேயே மிகக் குறைவான வெளிநாட்டுக் கடனைக் கொண்டிருக்கும் ஒரே நாடு புருனே. இங்குள்ள வங்கிகள் மற்றும் அரசு கருவூலங்கள் பெட்ரோலியப் பொருட்களின் வருமானத்தால் நிரம்பியுள்ளன.

உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலையில் இருக்கும் போது புருனெய் அமைதியாக இருப்பதற்கு இதுவே காரணம்.

பிற உலக நாடுகள் தொழிலை நடத்த வெளிநாட்டில் இருந்து கடன் வாங்கவேண்டியுள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக, பல நாடுகளின் வருவாய் வீழ்ச்சியடைந்து, செலவுகள் அதிகரித்துள்ளதால், அரசுகளைத் தவிர தனியார் கடன் வழங்குபவர்களிடமிருந்தும் கடன் பெற வேண்டியுள்ளது.

பொருளாதாரத்தின் சிறப்பு என்ன?

புருனேயின் பொருளாதாரத்திற்கு சாதகமான ஒரு விஷயம் என்னவென்றால், அது சிறிய அளவு கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றாலும்கூட அதை வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டியதில்லை.

மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், அரசு எல்லா லாபத்தையும் சொந்த நாட்டிலேயே வைத்திருக்கிறது.

“திறமையான நிதி நிர்வாகம், அரசின் முன்னுரிமையாக உள்ளது. நாட்டின் மற்றும் அதன் குடிமக்கள் மீதான நிதிச்சுமையை இது கணிசமாக குறைக்கிறது,” என்று மூடிஸின் பொருளாதார நிபுணர் எரிக் சியாங் கூறுகிறார்.

“புருனேயில் நடப்புக் கணக்கு பெரும்பாலும் உபரியாகவே உள்ளது. இது வெளிநாட்டுக் கடனை திருப்பிச்செலுத்துவதை எளிதாக்குகிறது. நாட்டில் வட்டி விகிதங்களும் குறைவாகவே உள்ளன. அதனால்தான் நாட்டு நலப்பணிகளுக்கு பணத்தை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.”

ஆனால் புருனேயில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்று சொல்லமுடியாது.

உலகம் முழுவதும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதால், காலப்போக்கில் பெட்ரோ பொருட்களின் நுகர்வு குறையும். எனவே பெட்ரோ தயாரிப்புகளைச் சார்ந்திருக்கும் பொருளாதாரத்தை நாடு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

ஒட்டுமொத்தப் பொருளாதாரமும், ஒரே ஒரு பொருளை சார்ந்திருப்பது ஆபத்தானது.

“மாறிவரும் உலகில் எரிவாயு மற்றும் எண்ணெயை அதிகம் சார்ந்திருப்பது ஒரு பிரச்சனையாக மாறக்கூடும். ஏனெனில் உலகின் எரியாற்றல் பயன்பாட்டு மாடல், ஒரு மாறும் கட்டத்தில் உள்ளது.” என்று ICEX இன் வெளிநாட்டு வர்த்தக நிபுணர் கூறுகிறார்.

கடுமையான இஸ்லாமிய சட்டம்

புருனே 1888 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இங்கு 1929-ம் ஆண்டு எண்ணெய் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு, தோண்டும் பணி தொடங்கியது.

1962 ஆம் ஆண்டில் நாட்டில் கலகம் ஏற்பட்டது. மன்னராட்சியை எதிர்த்தவர்கள் ஆயுதம் ஏந்தினர். இந்த கிளர்ச்சியை நசுக்கிய பிறகு நாட்டின் சுல்தான் மலேசியாவுடன் இணைய மறுத்துவிட்டார்.

அதே ஆண்டு புருனே தன்னை தனி நாடாக அறிவித்தது. 1984 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வெளியேறி அது சுதந்திர நாடாக மாறியது.

புருனெயின் சுல்தான் ஹசனல் போல்கியா. அவரது முடிசூட்டு விழா 1968 ஆகஸ்டில் நடைபெற்றது. அவரது தந்தை ஹாஜி உமர் அலி சைஃபுத்தீன் அரச பதவியைத்துறந்து அரியணையை அவரிடம் ஒப்படைத்தார்.

1984 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு, சுல்தான் ஹசனல் தன்னை நாட்டின் பிரதமராக அறிவித்துக்கொண்டார். நாட்டில் ‘மலாய் முஸ்லிம் மன்னராட்சி’ சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டார். இந்த புதிய அமைப்பில், சுல்தான் இஸ்லாத்தின் பாதுகாவலராக முன்வைக்கப்பட்டார்.

2014 ஆம் ஆண்டில், கிழக்கு ஆசியாவில் ஷரியா சட்டத்தை அமல்படுத்திய முதல் நாடாக புருனெய் ஆனது.

ஆனால் 2019 ஆம் ஆண்டில், ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லெறிந்து கொல்லும் சட்டத்தை அவர் ரத்து செய்தார். இதைச் செய்யும்படி ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி போன்ற முக்கிய நபர்கள் அவர் மீது அழுத்தம் கொடுத்தனர்.

நன்றி BBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *