electricity

புதுச்சேரியில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முழு அடைப்பு போராட்டம்:

புதுச்சேரியில் இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ, டெம்போ மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், ப்ரிபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின் துறை தனியார் மயமாவதை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு:

இதேபோன்று பெரிய மீன் மார்க்கெட், சின்ன மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு மீன் மார்கெட்டுகளும் மூடப்பட்டுள்ளது. மேலும் இந்த முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக ஆட்டோ, டெம்போக்கள் மற்றும் தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலஅரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் அரசு பேருந்துகள் மாநில எல்லையான கன்னி கோவில், மதகடிப்பட்டு, கனகசெட்டிகுளம், மற்றும் கோரிமேடு ஆகிய பகுதிகளில் பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது.

இதேபோன்று மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை புதுச்சேரி அரசு விடுமுறையும் அளித்துள்ளது.

இதனால் புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டது. மேலும் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் காரணமாக காலையில் பணிக்கு செல்பவர்களும் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் பேருந்துகள் இல்லாமல் கடுமையான அவதிக்கு ஆளாகினார்கள்.

இந்தியா கூட்டணி நடத்தும் போராட்டத்தின் காரணமாக புதுச்சேரியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருந்தாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

நன்றி samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *