சென்னை: மத்திய அரசு அண்மையில் ஒருங்கிணைந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஊழியர்களிடையே ஆதரவும் உள்ளது, அதேநேரம் ஒரு தரப்பினர் எதிர்க்கவும் செய்கிறார்கள். இந்நிலையில் அரசு ஊழியர்களின் இறுதி காலங்களில் பாதுகாப்புக்கு பழைய ஓய்வூதிய திட்டமே உறுதுணையாக இருக்கும் என அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு கடந்த ஆகஸ்ட் 24-ந்தேதி நடந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது.
இந்த திட்டம் மூலம் மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார். முழு ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்கான தகுதியாக பணி காலம் 25 ஆண்டுகளாகும். 25 ஆண்டுகளுக்கு குறைவாக அரசுப் பணியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஓய்வூதியத் தொகை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்படும்.
தற்போதைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமும், மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவீதமும் உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசின் பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில், சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளார்கள். இந்த திட்டம் எப்படி என்றால், ஒருவர் 25 வருடம் வேலை பார்த்து 80 ஆயிரம் சம்பளம் கடைசியாக வங்கினால், அவருக்கு 40000 ஓய்வூதியம் கிடைக்கும். இதுதான் அடிப்படையாகும். இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஊழியர்களிடையே போதிய ஆதரவு இல்லை.. 1.4.2003 தேதிக்குப் பிறகு அமல்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடாக உள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.குமார் வெளியிட்ட அறிவிப்பில், “புதிய ஓய்வூதிய திட்டம் கடந்த 2004 ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக அனைத்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள் இதை எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில், மத்திய அரசு தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது. இது புதிய ஓய்வூதிய திட்டத்தின் ஒரு மறுவடிவம் தான். மேலும் இந்த நியாயமற்ற ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அரசின் சாதனையாகக் கருதுகிறார்கள்.
மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.6 ஆயிரமாகவும் நிர்ணயம் செய்யப்படும். ஊழியர் பணிஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும், இதற்கு குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 25 ஆண்டுகளுக்கு குறைவாக பணிபுரிந்தவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 25 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு ஊழியர் தானாக முன்வந்து ஓய்வு பெற்றாலும் அவருக்கு ஓய்வூதியம், அவர் எப்போது 60 வயதை பூர்த்தி செய்கிறாரோ அந்த தேதியில் இருந்து தான் கிடைக்க போகிறது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தில் 10 ஆண்டுகள் சேவை புரிந்தாலே அவருடைய கடைசி மாத அடிப்படை ஊதியத்தில் 50சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும்.
மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) வசதி இருந்தது. ஆனால், புதிய மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் வருங்கால வைப்பு நிதி வசதிகள் இல்லை. அத்துடன், பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஏராளமான சலுகைகள் இருந்தன . அரசு ஊழியர்களின் முதுமைக்கால பாதுகாப்புக்கும், அவருடைய மறைவுக்குப் பின் அவர்களுடைய குடும்பத்துக்கும் பழைய ஓய்வூதிய திட்டமே உறுதுணையாக இருந்தது. அதுதான் சிறந்த திட்டம் ஆகும். எனவே, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தும் வரை அரசு ஊழியர்களின் போராட்டம் தொடரும் ” இவ்வாறு சி.குமார் கூறினார்.