டெல் அலிவ்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவின் ஹமாஸ் படைத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது ட்ரோன் ‛அட்டாக்’ நடத்தப்பட்டுள்ளது. இதில் நெதன்யாகு உள்பட யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில் என்ன நடந்தது? என்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று ஈரான் கூறி வருகிறது. ஆனால் இஸ்ரேல் கேட்கவில்லை. தொடர்ந்து காசாவில் நுழைந்து அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனால் இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் இருந்து ஈரான் அந்த நாட்டு மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் செயல்படும் தனது ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா அமைப்பு மூலம் ஈரான், இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆனாலும் இஸ்ரேல் அசரவில்லை. காசா மீதான போரை தொடர்ந்து வருவதோடு ஹிஸ்புல்லாக்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. அதோடு காசாவில் செயல்படும் ஹமாஸ் மற்றும் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லாக்களின் தளபதி, தலைவர்களை இஸ்ரேல் கொன்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே என்பவரை இஸ்ரேல் வான்வெளி தாக்குதலில் கொன்றது. ஈரான் புதிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அந்த நாட்டின் தலைநகரான டெக்ரான் சென்ற நிலையில் அங்கு வைத்து இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டின் மீது வான்வெளி தாக்குதல் நடத்தி இஸ்ரேல் தீர்த்து கட்டியது. அதன்பிறகு ஹிஸ்புல்லாவின் தலைவராக ஹசன் நஸ்ரல்லாவும் சில வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தெற்கு காசாவில் பதுங்கி இருந்த ஹமாஸ் படைத் தலைவர் யஹ்யா சின்வாரை இஸ்ரேல் கொன்றது.

இந்நிலையில் தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சொந்தமான சொகுசு பங்களா தெற்கு ஹைஃபா பகுதியில் சிசேரியா என்ற இடத்தில் உள்ளது. அந்த பங்களா மீது தான் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது பங்களாவின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த தாக்குதல் பற்றி தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛நெதன்யாகுவின் வீட்டின் மீது தாக்குதல் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வேளையில் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி அங்கு இல்லை. மொத்தம் 3 ட்ரோன்கள் லெபனானில் இருந்து இஸ்ரேலின் வான்எல்லைக்குள் நுழைந்தது. இதில் 2 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 3வது ட்ரோன் தான் சிசேரியாவில் உள்ள நெதன்யாகுவின் வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை” என்று கூறியுள்ளார்.

தற்போது ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்களை இஸ்ரேல் தொடர்ந்து கொன்று குவித்து வருகிறது. இந்த 2 அமைப்புகளும் ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகின்றன. இதனால் ஈரான் – இஸ்ரேல் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. நேரடியாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியும் உள்ளது. கடந்த ஒன்றாம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் இன்னும் பதிலடி கொடுக்கவில்லை. விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் நெதன்யாகு வீட்டின் மீது இன்று ட்ரோன் தாக்குதல் என்பது நடத்தப்பட்டுள்ளது. இதனால் நிச்சயம் இஸ்ரேல் சும்மா இருக்காது. விரைவில் ஈரான் மீது தாக்குதல் நடத்தும். இதன் காரணமாக இஸ்ரேல் – ஈரான் இடையே பெரும் பதற்றம் உருவாகி உள்ளது.   

Nandri oneindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *