cbi

கொல்கத்தா: கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த வழக்கை இப்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இதில் கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்கள் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த வழக்கில் வரும் நாட்களில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் கடந்த ஆக. 9ம் தேதி பயிற்சி மருத்துவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை முதலில் கொல்கத்தா போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும், அவர்கள் சரியாக விசாரணை நடத்தவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ: இதற்கிடையே முதுகலை பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராயிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தினர். மேலும், குற்றம் நடந்த போது கல்லூரி முதல்வராக இருந்த சந்தீப் கோஷுக்கு தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

ஆதாரம்: அப்போது இந்த வழக்கு தொடர்பான உறுதியான ஆதாரங்கள் கிடைத்ததா என்று சிபிஐ அதிகாரிகளை நோக்கி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிபிஐ அதிகாரி ஒருவர், “நிறைய ஆதாரம் கிடைத்து இருக்கிறது” என்று பதிலளித்தார். மேலும், கேஸ் தொடர்பாக முக்கிய தகவல்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கில் அக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தினர். இது ஒரு பக்கம் இருக்க மருத்துவமனையில் பல நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் சந்தீப் கோஷ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அந்த விசாரணையும் தனியாக நடந்து வருகிறது.

உண்மையைக் கண்டறியும் சோதனை: இந்த வழக்கில் சந்தேகப்படும் நபர்களிடம் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தக் கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி அளித்ததை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களிடம் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சஞ்சய் ராயிடமும் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது தான் எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை என்று சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார். தான் செமினார் ஹாலுக்கு சென்ற போது ஏற்கனவே பயிற்சி மருத்துவர் இறந்து கிடந்ததாகவும் அதைப் பார்த்தவுடன் அங்கிருந்து ஓடி வந்துவிட்டதாகவும் சஞ்சய் ராய் கூறியிருக்கிறான். மேலும், தான் ஒரு நிரபராதி என்றும் கூறியிருக்கிறான்.

சிபிஐ சொல்வது என்ன: இருப்பினும், அவன் கூறிய கருத்துகள் முழுமையாக நம்பும்படி இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். குற்றம் நடந்த அன்று மருத்துவமனைக்குச் சென்றது ஏன்.. அன்றைய தினம் முகத்தில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதே அதற்கான காரணம் என்ன எனக் கேட்ட போது அதற்கு சஞ்சய் ராயால் தெளிவான பதிலை அளிக்க முடியவில்லை என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி oneindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *