4o
வாஷிங்டன்: வங்கதேச அரசின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முழு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தார்.
அமெரிக்கா, நியூயார்க்கில் ஐ.நா., பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்தபோதுவங்கதேச அரசின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ், அதிபர் ஜோ பைடன் ஆகிய இருவரும் சந்தித்து பேசினர். மாணவர்கள் முந்தைய அரசின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும், வங்கதேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை உருவாக்கவும் போராடியது பற்றி பைடனிடம் முகமது விளக்கினார்.
ஆதரவு
அப்போது, ‘மாணவர்கள் தங்கள் நாட்டிற்காக இவ்வளவு தியாகம் செய்ய முடிந்தால், அவர்களுக்கு இன்னும் அதிகமாக செய்ய வேண்டும். வங்கதேச இடைக்கால அரசிற்கு அமெரிக்கா முழு ஆதரவு வழங்கும்’ என பைடன் உறுதி அளித்தார்.
தலையீடு
வங்கதேசத்தின் நிலவும் வன்முறையில் அமெரிக்கா தலையீடு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவே கடந்த காலத்தில் அமெரிக்க தலையீடு பற்றி சுட்டிக்காட்டினார். இந்த கூற்றுக்களை வெள்ளை மாளிகை நிராகரித்தது. வங்கதேசத்தில் நிலவும் சூழல்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி dinamalar