சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திடீர் உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்வி, வாக்கு சதவீதம் குறைந்திருப்பது, வாக்குகள் பிரிவது, திமுகவின் அசுர பலம், பாஜகவின் தேர்தல் வியூகங்கள் போன்றவை குறித்தெல்லாம் அதிமுக நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
முதல்கட்ட ஆலோசனை கூட்டங்கள் தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதியிலும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 2ம் கட்ட ஆலோசனை கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில், நேற்று ஜூலை 30ம் தேதியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் பங்கேற்றிருந்தார்.. கூட்டம் நடந்து கொண்டேயிருக்கும்போது, நத்தம் விஸ்வநாதனுக்கு உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், கூட்டத்திலிருந்து முன்கூட்டியே கிளம்பி சென்றுவிட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, நரம்பியல் பிரச்சனை காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.. எனவே ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார் நத்தம் விஸ்வநாதன்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது… தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நத்தம் விஸ்வநாதனின் உடல்நிலையை அருகிலிருந்து கவனித்து வருகிறார்கள்.
பெரியசாமி: இதனிடையே, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அமைச்சர் ஐ.பெரியசாமி காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று காய்ச்சல் அதிகரித்தது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு டெங்கு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நன்றி Tamil.oneindia