மேலக்கோட்டையூர்: “மாணவர்கள் நமது பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும்” என்று விஐடி சென்னை பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி வலியுறுத்தினாா்.
விஐடி சென்னை பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு விஐடி பல்கலைகழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், முனைவர் சேகர் விசுவநாதன், நிர்வாக இயக்குநர் முனைவர் சந்தியா பென்டாரெட்டி மற்றும் உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ். விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விஐடி பல்கலைகழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, கெளரவ விருந்தினராக எல்டிஐ மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி சேதனா பட்நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், 38 மாணவ – மாணவியருக்கு தங்கப் பதக்கங்கள் உள்பட இளங்கலையில் 2,144, முதுகலையில் 817, ஆராய்ச்சி மாணவர்கள் 95 என மொத்தம் 3,056 மாணவ – மாணவியர் பட்டம் பெற்றனர்.
விழாவில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி பேசுகையில்; “இந்தியா உலக அளவில் ஐந்தாவது பொருளாதார நாடாக தற்போது உள்ளது. விரைவில் 3-வது மிக பெரிய நாடாக மாறும். இந்தியர்கள் பல பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை பதவிகளை வகித்து வருகின்றனர். மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். 2047-ம் ஆண்டு இந்தியாவின் 100-வது சுந்திர நாளில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும். அது மாணவர்களாகிய உங்களுடைய இன்றைய உழைப்பினால் சாத்தியமாகும்.
எளிதில் தொழில் தொடங்குவதற்கான நாடுகள் வரிசையில் 2014-ம் ஆண்டு 142-ம் இடத்தில் இருந்த நாம் தற்போது 63-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். நாம் வேலை செய்பவர்களாக இருப்பதை விட வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். மாற்றம் மற்றும் புதுமைக்கான தீபம் ஏற்றுபவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள்தான் இந்தியாவின் பாதுகாவலர்.
இந்தியக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தூதுவர் நீங்கள். உலகம் முழுவதும் நீங்கள் பயணித்தாலும் உங்கள் தொடக்க புள்ளியை மறக்கக் கூடாது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், தாய்மொழி, தாய் நாட்டை மறக்கக் கூடாது. நம்முடைய பண்பாடு கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும். மேலும், நம் முன்னேற்றத்துக்காக உதவியவர்களை வாழ்வில் மறக்கக்கூடாது” என்றார்.
விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் பேசும்போது, “இந்தியாவின் 145 கோடி மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் மட்டுமே பட்டதாரிகள். உயர் கல்வியில் மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 27 சதவீதம் மட்டுமே. அது 50 சதவீதம் ஆக உயர வேண்டும். கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட போது நான் அதற்கு ஆதரவாக இருந்து வாக்களித்தேன்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கல்விக்காக செலவழிக்கின்றன. ஆனால், இந்தியா 3 சதவீதம் மட்டுமே செலவழிக்கிறது. அது சென்ற ஆண்டில் 2.8 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டில் 2.7 சதவீதமாக உள்ளது.
இதனால் நடுத்தர மற்றும் எழை மாணவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்பு கிடைப்பதில்லை. பெண்களுக்கு பணி வாய்ப்பு அதிகம் வழங்கப்பட வேண்டும். உண்மையான சுதந்திரம் கல்வி வாயிலாக மட்டுமே கிடைக்கும். வளர்ந்த நாடுகளில் தனி நபர் வருமானம் 13,000 டாலர்களாக உள்ளது. ஆனால் இந்தியாவில் அது 2,700 டாலர்களாக மட்டும் தான் உள்ளது” என்றார்.
கௌரவ விருந்தினராக பங்கேற்ற எல்டிஐ மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி சேதனா பட்நாயக் பேசுகையில், “மாணவர்கள் விரைவாக செயலாற்றுவதன் மூலம் உயர்வான வெற்றிகளை அடைய முடியும். தோல்வியில் இருந்து பாடம் கற்றுகொள்ளுங்கள் வாழ்வில் வெற்றி அடைய எந்த குறுக்கு வழியும் இல்லை” என்றார்.
முன்னதாக, விஐடி சென்னை வளாகத்தில் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விஐடி பல்கலைகழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் முனைவர் கோ.விசுவநாதனும் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டியும் இணைந்து டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மாணவர் விடுதி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
நன்றி hindutamil