“திடீரென ஏற்படும் உடல் பருமன்தான் குதிகால் வலிக்கான மிகப் பரவலான காரணம்…”
Doctor Vikatan: என் வயது 42. எனக்கு கடந்த சில மாதங்களாக குதிகால்களில் வலி இருக்கிறது. கால்களை ஊன்றி நடக்க முடியாத அளவுக்கு வலி அதிகமாக இருக்கிறது. குதிகால் வலி ஏற்பட என்ன காரணம்… அதிலிருந்து மீள நிரந்தர தீர்வுகள் இருந்தால் சொல்லுங்கள்….
பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.
நமது உடலில் அதிக பளுவைத் தாங்கக்கூடிய பகுதி என்றால் அது குதிகால்தான். நடக்கும்போது பாதிக்குப் பாதி தாங்கப்படுகிற எடையானது, வேக நடையாகவோ, ஓட்டமாகவோ மாறும்போது உடலின் ஒட்டுமொத்த எடையும் குதிகால்களில் விழும்.
இந்த அடிப்படையை வைத்துப் பார்க்கும்போது அதிகமான உடல் எடைதான் குதிகால் வலிக்கான முதல் காரணம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். குறிப்பாக, திடீரென ஏற்படும் உடல் பருமன்தான் குதிகால் வலிக்கான மிகப் பரவலான காரணம். எடை அதிகம் விழும்போது, வில் போன்று அமைந்துள்ள நம் பாதங்கள் ஸ்ட்ரெச் ஆகத் தொடங்கும். அதனால் ஏற்படுகிற வலிதான், குதிகால் வலியாக உணரப்படுகிறது.
குதிகால் வலிக்கான அடுத்த காரணம், பொருத்தமற்ற காலணிகள். செருப்போ, ஷூவோ, நம் கால்களுக்குப் பொருத்தமற்றதாக இருக்கும்போது குதிகால் வலி வரும். கால்களைக் கோணலாக வைத்து நடப்பதாலும் வரும். புதிதாக ஹீல்ஸ் அணிய ஆரம்பித்திருப்போருக்கும் குதிகால் வலி வரும். இப்படி எந்தக் காரணங்களும் இல்லை, ஆனாலும் குதிகால் வலி இருக்கிறது என்றால், அதற்கான வேறு காரணங்களை ஆராய வேண்டியது அவசியம். ரத்தப் பரிசோதனையின் மூலம் நம் உடலில் இன்ஃப்ளமேஷன் எனப்படும் அழற்சி இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளலாம்.
குதிகால் பகுதிகளில் உப்பு படிமானம் சேர்கிறதா என்பதையும் செக் செய்ய வேண்டும். குதிகால் வலிக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற தீர்வை நாட வேண்டும். உதாரணத்துக்கு, எடை அதிகரிப்பால் ஏற்பட்ட வலி என்றால், எடையைக் குறைக்க வேண்டும். பொருத்தமற்ற காலணிகள்தான் காரணம் என்றால் அதை மாற்ற வேண்டும். அழற்சி இருப்பது உறுதியானால் அதற்கான சிகிச்சை பெற வேண்டும். தேய்மானம் ஏற்பட்டிருந்தால், அதற்கான பயிற்சி மற்றும் பிசியோதெரபி சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
காரணம் எதுவானாலும், குதிகால் வலிக்கான லேட்டஸ்ட் சிகிச்சையாக ஷாக் வேவ் சிகிச்சை உதவுகிறது. குதிகால் பகுதிக்கான ரத்த ஓட்டம் இயல்பிலேயே குறைவாக இருக்கும். சிறுநீரகக் கற்களை உடைப்பது போல ஷாக்வேவ் தெரபி மூலம் குதிகால் பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியும். அதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் பெற முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.