சென்னை: எங்கள் கிரெடிட் கார்டை வாங்கினால், மொபைல் பில்லுக்கு 25 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். ஸ்விக்கி , ஜொமோடோவில் கேஸ்பேக் ஆபர் மற்றும் கேஸ், மின்சார பில் என பல ஆபர்கள் அள்ளி தரப்படுகின்றன. எந்த நம்பிக்கையில் கிரெடிட் கார்டுகள் மூலம் அவ்வளவு சலுகைகளை அள்ளி அள்ளி வங்கிகள் தருகின்றன. அதன்பின்னால் உள்ள சூட்சுமம் பற்றி தெரியுமா? இதனை பாருங்கள்.
இன்றைக்கு நம்மை சுற்றியுள்ள நவீன பொருளாதாரம் எப்படி என்றால், அத்தனை ஆடம்பரமான பொருட்களையும் வாங்கி கொள்ள வேண்டும். ஆனால் அது சாமானியர்களுக்கு சாத்தியமா.. சாத்தியமாக்குவது தான் இந்த பொருளாதாரத்தின் நோக்கமாக உள்ளது. ஆனால் பணமே இல்லாத ஒருவரால், கார், பைக் எல்லாம் வாங்க முடியுமா என்றால், நிச்சயம் வாங்க முடியாது. ஆனால் இஎம்ஐ மூலம் இந்த வசதி அளிக்கப்படுகிறது.
இதேபோல் தான் சம்பளம் வருவதற்கு முன்பே வீட்டின் செலவுகளை செய்ய கிரெடிட் கார்டுகள் மூலம் கடன் தரப்படுகிறது. பணமே இல்லாவிட்டால் அமைதியாக இருக்கும் மக்கள், கிரெடிட் கார்டு கையில் இருப்பதால், வேண்டிய பொருட்கள், வேண்டாத பொருட்கள் என எல்லாவற்றையும் வாங்கி குவிக்கிறார்கள். இதன் மூலம் தான் வங்கிகளுக்கு மிகப்பெரிய லாபம் ஆகும். தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகன கடன், நகைக்கடன் என எல்லா கடனையும் விட கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி அதிகம் ஆகும். ஒவ்வொரு மாதமும் சரியாக பணத்தை கட்டிவிட்டால் கிரெடிட் கார்டுகள் மிகப்பெரிய வரமாக இருக்கும். ஆனால் மொத்த பணத்தையும் சரியாக கட்டாவிட்டால், அவர்களை படுகுழியில் தள்ளிவிடும்.
கிரெடிட் கார்டுகளை மக்களை வாங்க வைக்க ஏராளமான சலுகைகளை ஒவ்வொரு வங்கிகளும் தருகின்றன. மாதத்திற்கு இரண்டு இலவச மூவி டிக்கெட், மொபைல் பில்களில் 25 சதவீதம் வரை கூட கேஷ் பேக், மின் கட்டணம், கேஸ் பில்லிற்க 10 சதவீதம் கேஷ் பேக், ஸ்விக்கி, ஜொமோட்டாவில் 10 சதவீதம் கேஷ்பேக், 500 ரூபாய் வரை அமேசான் வவுச்சர், பெட்ரோல் போட்டால் ஒரு சதவீதம் தள்ளுபடி, விமானங்களில் டிக்கெட் கட்டணம் தள்ளுபடி, ஓட்டல்களில் தங்குவதற்கு கட்டணம் தள்ளுபடி, சுற்றுலா பேக்கேஜ் தள்ளுபடி பல்வேறு நுகர்வு சார்ந்த தள்ளுபடிகள் வாங்கப்படுகின்றன. இதுதவிர பல்வறு ஆன்லைன் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, கிரெடிட் கார்டில் வாங்குவோருக்கு பல பொருட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்படுகின்றன. 2000 வரை கூட சில கிரெடிட் கார்களுக்கு தள்ளுபடி தரப்படுகிறது/
இப்படி கிரெடிட் கார்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை நிறுவனங்கள் அளிக்க காரணம், அதிகப்படியான விஷயங்களை வாங்கி, அதற்கு வட்டி மட்டும் நிலைக்கு கொண்டு வருவதுதான். கிரெடிட் கார்டுகளை பொறுத்த வரை தனக்கு வேண்டிய பொருட்களை மட்டுமே வாங்கி அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் அது மிகப்பெரிய லாபமாக இருக்கும்.
மாறாக அந்த கிரெடிட் கார்டில் தள்ளுபடி தருகிறார்கள் என்பதற்காக சம்பளத்தை பற்றி சிந்திக்காமல், அளவுக்கு மீறி இஎம்ஐயில் பொருட்களை வாங்குவது, அவசரத்திற்கு பணம் எடுப்பது, ஓட்டலில் சாப்பிடுவது, பார்களில் மது அருந்துவது, ஜவுளிக்கடைகளில் பொருட்கள் வாங்குவது, அவசியம் இன்றி ஆடம்பரமாக மொபைல், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, மெத்தை போன்றவற்றை அதிக விலைக்கு வாங்குவது போன்றவை சிக்கலை எற்படுத்தும்.
வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சேமித்து வாங்கினால் பிரச்சனை இல்லை.. ஆனால் சம்பளத்தை பற்றி யோசிக்காமல், அதனை கிரெடிட் கார்டில் வாங்கினால் அது சிக்கலாக்கும். அன்றாட செலவுக்கு கூட கிரெடிட் கார்டை பயன்படுத்த தொடங்கினால் அது சிக்கலில் தான் பலருக்கு முடிகிறது.. எனினும் சிலர் எந்த ஆடம்பரத்தையும் விரும்பாமல் அற்புதமாக வாழ்ந்து பணத்தை சேமிக்கிறார்கள்.
திருப்பூரில் வசிக்கும் பனியன் தொழிலாளி ஒருவர், வெறும் 800 ரூபாய் தினசரி சம்பாதிக்கிறார். அவர் மனைவி 400 ரூபாய் சம்பாதிக்கிறார். அவரிடம் நல்ல செல்போன் இல்லை.. பெரிய கட்டில் இல்லை.. மிகப்பெரிய ஸ்மார்ட் டிவி இல்லை (சாதாரண டிவியே உள்ளது).. நல்ல த்ரமான ஸ்கூட்டர் இல்லை (பழைய பைக் உள்ளது) .. அரசு பள்ளியில் தான் மகள் படிக்கிறார்.. அவருக்கு எந்த கடனும் இல்லை. சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் சேர்த்து சொந்தமாக வீடே (கடன் இல்லாமல்) வாங்கி விட்டார்.
அவரிடம் ஏன் இப்படி இருக்கீங்க என்று கேட்ட போது, நான் ஜியோ போன் தான் வைத்திருக்கிறேன். பெரிய செல்போன் வாங்கினால், அதற்கு இஎம்ஐயில் விழுக வேண்டும். அதேபோல் ஸ்மார்ட் டிவி எடுத்தால் அதற்கும் இஎம்ஐ கட்ட வேண்டும். ஸ்கூட்டர் எடுத்தால் அதற்கும் இஎம்ஐ கட்ட வேண்டும். மகளை மெட்ரிகுலேசனில் சேர்த்தால் அதற்கும் பணம் பெரிதாக கட்ட வேண்டும்.. பைக்கை மாற்றினால் அதற்கும் பணம் கட்ட வேண்டும் இவற்றை நான் விரும்பவில்லை… இருப்பதை கொண்டு வாழ்கிறேன். தேவை ஏற்பட்டால் மட்டும் மிகச்சிறிய அளவில் பொருட்களை வாங்கி கொள்வேன்.ஓட்டலில் போய் மாதம் மாதம் சாப்பிடமாட்டேன். எந்த ஆடம்பரத்திலும் விழுகாத காரணத்தால் சம்பாதித்த பணத்தை சேர்த்து இன்று திருப்பூரில் வீடே வாங்கிவிட்டேன் என்றார். உண்மையில் அவருக்கு எந்த கடனும் இல்லை.
சென்னையை பொறுத்தவரை மேற்சொன்ன எல்லா பொருட்களுக்காகவும் தான் கடன் வாங்குகிறார்கள். கடனிலேயே வாழ்கிறார்கள். இதுதான் கிரெடிட் கார்டுகளின் சூட்சமாக இருக்கிறது. ஆடம்பரத்தில் மயங்கி விழுவோரை மட்டுமே கிரெடிட் கார்டுகள் காலி செய்கின்றன. அதேநேரம் புத்திசாலித்தனமாக உள்ளவர்கள் கிரெடிட் கார்டுகளை மிக மிக அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தி ஆபர்களை அள்ளுகிறார்கள். சரியாக பணத்தை கட்டியும் விடுகிறார்கள். இதன் மூலம் கணிசமான பணத்தை சேமிக்கவும் செய்கிறார்கள்.
நன்றி oneindia