சென்னை: மக்களவைத் தேர்தல் முடிவடைந்த கையோடு சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுக தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணிக் கட்சியுடன் பேச்சுவார்த்தைக்கு என ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு அவர்களும் பணிகளை தொடங்கி இருக்கின்றனர். ஆனால் அதிமுகவோ இன்னும் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்தே பேசி வருவதால் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக புலம்புகின்றனர் அதிமுகவினர்.
பெரும் எதிர்பார்ப்புகள் இடையே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக பாஜக கூட்டணி கட்சி ஆதரவோடு ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அந்தக் கூட்டணி பரிதாப தோல்வியை சந்தித்தது.
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக -திமுக இடையே தான் போட்டி இருந்தது. ஆனால் பல தொகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் இரண்டாம் இடத்திற்கு வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. மத்தியில் ஆட்சியில் பங்கெடுக்க முடியாவிட்டாலும் தமிழகத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி நிச்சயமாக தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகித்த திமுக தலைமையை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இது முன்னோட்டமாக கருதப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதையடுத்து சூட்டோடு சூடாக சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுக தொடங்கியிருக்கிறது. வெளிப்படையாக ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின்.
அந்த குழுவில் மூத்த அமைச்சர்கள் தொடங்கி இளம் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் வரை இடம் பெற்று இருக்கின்றனர். அவர்கள் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவும் கூட்டணிக் கட்சியில் உடனான பேச்சுவார்த்தை தொடர்பாகவும் கட்சியின் தலைவருக்கு பரிந்துரை செய்வார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த மாதமே இந்த குழு அறிவிக்கப்பட்டாலும் அதற்கு முன்னதாகவே சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிட்டது என்கின்றனர் அந்த கட்சி மூத்த நிர்வாகிகள்.
குறிப்பாக மக்களவைத் தேர்தலின் போது சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளையும் திமுக தலைமை செய்திருக்கிறது. ஏற்கனவே பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள் மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீண்டும் அவரவர் தொகுதியிலேயே போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலை போல ஒரு சில தொகுதிகளில் மக்களின் அதிருப்தியை சந்தித்த வேட்பாளர்களுக்கு இந்த முறை வாய்ப்பு நிச்சயமாக மறுக்கப்படும். அது யார் யார் என்ற பட்டியலும் தயாராகி வருகிறது. இதற்காக ஸ்பெஷல் டீம் ஒன்று தொகுதி வாரியாக ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதியை ஒதுக்கலாம் எனவும் தற்போது மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இதனால் 2025 தொடக்கத்திலேயே சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு வரும்போது திமுக முழு வீச்சில் தேர்தல் தேர்தல் பணிகளை ஜனவரி மாதத்திலேயே தொடங்கும் என்கின்றனர் அந்த கட்சியின் சீனியர்கள். ஒருபுறம் இருக்க தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொண்டர்கள் சற்று சுணக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சில நிர்வாகிகளிடம் பேசிய போது,” கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று அனைத்து தேர்தல்களிலும் அவர் தோல்வியை சந்தித்திருக்கிறார். இதனால் சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரோடு இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என எச்சரித்து இருப்பதால் பலர் வாய் திறக்கவே அஞ்சுகின்றனர்.
தற்போது கூட கடந்த வாரம் வரை மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து தான் ஆலோசிக்கப்பட்டது. எதிர்கால திட்டங்கள் குறித்து எந்த திட்டமிடலும் அதிமுகவிலும் இல்லை. மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை அல்லது கண்டு கொள்ளவில்லை. இப்படியே சென்றால் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரிய பின்னடைவை சந்திக்க வேண்டி வரும். கூட்டணியிலும் தேமுதிக தவிர்த்து பெரிய கட்சி எதுவும் இல்லை. எனவே கூட்டணியை வலுப்படுத்த வேண்டியது மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் அது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இப்படியே போனால் 2026 தேர்தலும் பெரிய ஏமாற்றத்தை அளிக்கும். எனவே தற்போதைய மாவட்ட அளவிலான நிர்வாகிகளை சந்தித்து சட்டமன்ற தேர்தலுக்கான பணியை முன்னெடுக்க வேண்டும்” என்றனர்.
நன்றி oneindia