வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்? எந்தெந்த மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளக்கூடாது? விரிவாக பார்க்கலாம்.
காய்ச்சல், தலைவலி, உடல் வலி என எதுவாக இருந்தாலும் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. ஆனால் வலி நிவாரணிகளால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதமான அல்லது கடுமையான வலிக்கு பயன்படுத்தப்படும் ஓபியாய்டு (Opioid) மாத்திரைகள், மூளை, முதுகெலும்பு, இரைப்பை, குடல் உள்ளிட்ட உறுப்புகளில் உள்ள நரம்பு செல்கள் மீது ஓபிபாய்டு ஏற்பிகளுடன் பிணைப்பதன் மூலம் அவை வலி சமிக்ஞ்சைகளை தடுக்கின்றன. இதனால் வலி குறைகிறது. ஓபியம் பாப்பி என்ற தாவரத்தில் இருந்து இந்த வலி நிவாரணிகள் தயாரிக்கப்படுவதால் இவை உடலுக்கு போதை மயக்கத்தை கொடுக்கின்றன.
இந்த வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் போதை மயக்கத்திற்கு அடிமையாகலாம். தூக்கம், மலச்சிக்கல் மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் சுவாசம் மற்றும் மன அழுத்தம் போன்ற பக்க விளைவுகளை கூட ஏற்படுத்தும்.
வீக்கம் மற்றும் வலியை குறைப்பதில் ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த மருந்துகளை அதிகம் பயன்படுத்தினால் வயிற்றுப் புண், சிறுநீரக பாதிப்பு, இரைப்பை, குடல் பிரச்சனைகள் ஏற்படலாம். சில நேரங்களில் இது மாரடைப்பு பக்கவாதம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
எனவே Ibuprofen, Naproxen, Diclofanac, Celecoxib, Mefenamic Acid, Etoricoxim, Indomethacin, Aspirin ஆகிய மருந்துகளை மருத்துவர்களின் அறிவுரை இன்றி எடுத்துக் கொள்ளக்கூடாது. இதனால் வயிறு மற்றும் குடல் பிரச்சனைகள் ஏற்படலாம். சில நேரங்களில் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நிலைகளுக்கு கூட வழிவகுக்கும்.
சர்வதேச அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாட்டில் 1700 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற சூழல் இருக்கும் நிலையில் பெரும்பாலான மக்களிடம் சுய மருத்துவம் பரவலாக காணப்படுகிறது. ஆனால் காய்ச்சல், தலைவலி என எதுவாக இருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனையின்றி சுயமாக மருந்து எடுத்துக் கொள்வது மிகப்பெரிய தவறு. இதனால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே ஏதேனும் உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் போது மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது அவசியம்.