தமிழ்நாட்டில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் பரவும் புதுவகை வைரஸில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
கோடைக் காலம் முடிந்து, மழைக்காலம் தொடங்கும்போது வைரஸ்களும் அதிகளவில் பரவும். இதனால் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மருத்துவமனைகளில் நீண்ட வரிசையை காணலாம்.
இந்த நிலையில் தற்போது சுவாசப் பாதை மூலம் பரவும் ஒருவித வைரஸ் காய்ச்சல் அதிகமாக தென்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது H1N1 பன்றி காய்ச்சலாக இருக்கலாம் அல்லது கொரோனாவின் சமீபத்திய திரிபான XEC ஆக கூட இருக்கலாம் எனத் தெரிகிறது. சிலருக்கு டெங்கு போன்று தட்டணுக்கள் குறைந்தாலும், டெங்கு என்பதற்கான ரிசல்ட் கிடைப்பதில்லை.
இந்நிலையில் தற்போது பரவி வரும் புதிய வைரஸுக்கான அறிகுறிகளாக, மூன்று நாட்களுக்கு மேல் விடாத காய்ச்சல், மூன்று நாட்களாக இருந்த காய்ச்சல் திடீரென்று நின்று , பாதம் உள்ளங்கை குளிர்ந்து போதல், உண்ண, பருக இயலாமை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, மலம் கருப்பாக செல்லுதல், மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், பல் ஈறுகளில் ரத்தக்கசிவு ஆகியவை முதன்மை அறிகுறிகளாக உள்ளன.
மேலும் திடீர் வயிறு உப்புசம், வயிற்றில் வலி ஏற்படுதல், அதீத உடல் சோர்வு மற்றும் மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத் திணறல், காய்ச்சலுடன் வலிப்பு போன்றவை புதிய வகை வைரஸுக்கு அறிகுறிகள் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், அவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. அதேபோல், காய்ச்சல் குறைந்த பிறகு 3 நாட்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும், அது தட்டணுக்கள் குறையக் கூடிய காலம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காய்ச்சல் இருக்கும் போது நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், ஓ.ஆர்.எஸ் எனும் உப்புக் கரைசல் திரவத்தை அடிக்கடி பருகவும் வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இவை அனைத்தையும்விட வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் போது நல்ல ஓய்வு தேவை என்பதால், பயணங்களை ஒத்தி வைத்து விட்டு 2 அல்லது 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் எனமருத்துவர்கள் கூறுகின்றனர்.
நன்றி news18