தமிழ்நாட்டில் தொடர் தோல்வி; மத்திய அரசு பாடம் படிக்கவில்லை: மு.க. ஸ்டாலின்
“தமிழ்நாட்டில் தொடர் தோல்விக்கு பிறகும் மத்திய அரசு பாடம் படிக்கவில்லை; எல்லோருக்குமான அரசாக இருப்பதுதான் எங்களது தேர்தல் வெற்றி இரகசியம்” மு.க. ஸ்டாலின் கூறினார்.
தருமபுரி மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளில் சாத்தியமுள்ள அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தெரிவித்தார். அப்போது பேசிய மு.க. ஸ்டாலின், “தேர்தலுக்கு முன்பே பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகளை மனுக்களாக பெற்றோம். பொதுமக்களிடம் தொடர்ந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.
தொடர்ந்து, “மக்களின் கோரிக்கைகள் எந்த இடத்திலும் எங்களது பார்வையில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காக முதல்வரின் முகவரி துறை உருவாக்கப்பட்டது” என்றார். இதையடுத்து, “பொதுமக்கள் என் மீதும், திமுக மீதும் நம்பிக்கை வைத்து கேலி மனிதர்களை தோற்கடித்து தேர்தலில் வெற்றியை தேடித்தந்தீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து பேசிய மு.க ஸ்டாலின், “தமிழ்நாட்டில் தொடர் தோல்விகளை கண்ட பின்பும் மத்திய அரசு பாடம் கற்கவில்லை. மத்திய அரசு விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல்பட வேண்டும். அனைவர் வீட்டிலும் அரசின் திட்டங்கள் ஏதோ ஒரு வகையில் செயல்பட வேண்டும். எல்லோருக்குமான அரசாக இருப்பதுதான் எங்களது தேர்தல் வெற்றியின் இரகசியம்” என்றார்.
நன்றி IndianExpress