ஜூனியர் என்டிஆர் நடிப்பில் (செப்டம்பர் 27) அன்று அதாவது இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் தேவாரா. இந்த படத்தின் பிரீமியர் காட்சிக்கு பின்னர், பல ரசிகர்கள் படத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வரும் நிலையில், இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
ஜூனியர் என்டிஆர் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகு, நடித்துள்ள தனிப் படம் ‘தேவாரா’. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘RRR’ படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடித்திருந்தார். எனவே அது மல்டிஸ்டார் படமாகவே பார்க்கப்பட்டது. இதற்க்கு முன்னர் ஜூனியர் என்டிஆர் நடித்து, 2018 இல் ‘அரவிந்த சமேத வீர ராகவா’ திரைப்படம் தான் வெளியாகி இருந்தது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘தேவாரா’ படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
இயக்குனர் கொரட்டாலா சிவா மற்றும் என்டிஆர் கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் என்டிஆர் உடன் கொரட்டாலா சிவா கைகோர்த்த, ‘ஜனதா கேரேஜ்’ என்கிற தெலுங்கு படம் வெளியாகிசூப்பர் ஹிட்டானது. கொரட்டாலா சிவா, என்டிஆரை மிகவும் புதிய கதைக்களத்தில் நடிக்க வைத்திருந்தார். இதே பாணியில் தேவாரா படத்திலும், என்டிஆர் கதாபாத்திரத்தை மிகவும் வித்தியாசமானதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ‘தேவாரா’ பிரீமியர் காட்சிகள் முடிந்துவிட்ட நிலையில், இந்த படம் எப்படி இருக்கிறது? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள். தேவாராவின் முதல் பாதி நன்றாக இருந்ததாக பெரும்பாலான ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதே போல் தேவாராவின் டைட்டில் கார்டு குறித்தும் நெட்டிசன்கள் பலர் ட்வீட் செய்து வருவதை பார்க்க முடிகிறது.
என்டிஆர் அறிமுகம் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் தங்களது விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள். குறிப்பாக, என்டிஆர் கடலில் சுறா மீனுடன் சண்டையிட்டு என்ட்ரி கொடுக்கும் காட்சி… ‘சத்ரபதி’ படத்தில் பிரபாஸின் அறிமுகத்தை நினைவூட்டுவதாகவும் கூறி வருகிறார்கள்.
மேலும் இந்த படத்தில் என்டிஆர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது, படம் மீதான கூடுதல் சுவாரஸ்யத்தை கூட்டி உள்ளது. இரண்டு கதாபாத்திரங்களும் தனி தன்மையுடன் உள்ளதாகவும், ஆக்ஷன் காட்சிகள் திரையரங்கை அதிர வைக்கும் விதத்தில் உள்ளதாம். இண்டர்வெல் பிளாக் ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத ட்விஸ்டுடன் உள்ளதாம். தேவாரா படத்தின் இசை மற்றும் பிஜிஎம் வேற லெவலுக்கு ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறது. ஏற்கனவே சுட்டமல்லி பாடல் மூலம் ஒட்டு மொத்த தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்த அனிரூத்… இந்த படத்திற்கு பின்னர் தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வர போவது உறுதி என டோலிவுட் ரசிகர்கள் அடித்து கூறுகிறார்கள்.
என்டிஆர், தேவ் மற்றும் வாரா கதாபாத்திரங்களில் நேர்த்தியான வித்தியாசத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், வராவின் வேடம் சற்று ஈர்ப்பு குறித்ததாக உள்ளதாக சிலர் கூறி வருகிறார்கள். மேலும் ரசிகர்களை காந்தம் போல் இழுக்கும் இன்னொரு ஈர்ப்பு ஜான்வி கபூரின் கவர்ச்சி மற்றும் அழகு. தன்னுடைய முதல் தென்னிந்திய மொழி படத்திலேயே… பல ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
சைஃப் அலிகானின் நடிப்பு ஆதிபுருஷ் படத்தில் விமர்சிக்க பட்டாலும், ‘தேவாரா’ படத்தில் நல்ல வரவேற்பை பெற்றுளளது. இரண்டாம் பாதியில் சைப் அலிகானின் நடிப்பு அபாரம் என்றும்.. க்ளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட் படத்திற்கு கூடுதல் பலம் என கூறப்படுகிறது. குறிப்பாக இரண்டாம் பாகத்திற்கான தொடர்ச்சி வலுவானதாக உள்ளதாகவும், முதல் பாகம் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தேவாரா படத்தில் மைனஸ் என்றால்… வழக்கமான கதைக்களம் தான் . புதிதாக எதுவும் இல்லை. ஆனால் கொரட்டாலா சிவாவின் திரைக்கதை அந்த உணர்வைத் தரவில்லை. ஆங்காங்கே சலிப்பூட்டும் காட்சிகள் இருப்பது ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தை கொடுக்கிறது. பார்வையாளர்களின் கருது படி… கதை வழக்கமானது என்றாலும்… கதைக்களத்தை கொண்டு சென்ற விதம் அருமை. மொத்தத்தில் தேவாரா படம் பார்க்க வேண்டிய படம் என்றே கூறுகிறார்கள். ரசிகர்களுடன், சராசரி சினிமா ரசிகரும் ரசிக்கும் விதத்திலேயே உள்ளது. தேவாரா படத்தில் என்டிஆரின் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ளது. எனவே… RRR படத்திற்கு பின்னர் தேவாரா மூலம் தன்னுடைய வெற்றியை என்டிஆர் பதிவு செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி asianetnews