kashmir

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு நீக்கியது. அதன்பிறகு மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தான் செப்டம்பர் மாதத்துக்குள் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 2 நாள் பயணமாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலமாக செயல்பட்டு வந்தது. கடந்த 2018 ல் சட்டசபை கலைக்கப்பட்டது. அதன்பிறகு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு நடைமுறையில் இருந்தது. இதனை கடந்த 2019ம் ஆண்டில் மத்திய அரசு நீக்கியது. மேலும் மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. அதன்படி ஜம்மு காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

இதையடுத்து சட்டசபை தொகுதி மறுவரையறை பணிகள் தொடங்கியது. இந்த பணியின் காரணமாக ஜம்மு காஷ்மீரில் கடந்த 6 ஆண்டுகளாக சட்டசபை தேர்தல் என்பது நடைபெறவில்லை. சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும் என்று ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் கூட மத்திய அரசு இன்னும் செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் தான் திடீர் ட்விஸ்ட்டாக நாளை முதல் 2 நாள் பயணமாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஜம்மு காஷ்மீருக்கு செல்ல உள்ளனர். அதாவது செப்டம்பர் மாதத்துக்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அங்குள்ள சூழல் பற்றி ஆராய நாளை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளனர்.

ஏற்கனவே தொகுதி மறுவரையறை பணிகள் முடிவுக்கு வந்தன. ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுவரையறை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து தொகுதி மறுவரை அறிக்கையை 2022 மே மாதம் 5ம் தேதி வழங்கியது. அதன்படி ஜம்மு டிவிஷனில் கூடுதலாக 6 சட்டசபை தொகுதிகளும், காஷ்மீர் டிவிசனில் கூடுதலாக ஒரு தொகுதியும் உருவாக்கப்பட்டது. மொத்தம் 90 தொகுதிகள் ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் சட்டசபை தேர்தல் நடக்கும்போது ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 46 இடங்களில் வெல்ல வேண்டும்.

மேலும் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட தயாராகி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தி, வளர்ச்சியை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து வாக்கு சேகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும் பாஜக சார்பில் உயர்மட்ட கூட்டம் கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தேர்தல் தொடர்பான விரிவான நடவடிக்கை பற்றி அறிக்கை அளிக்கவும் மாவட்ட அளவிலான பாஜகவினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. அதுமட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் தேர்தலில் இந்த முறை பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என்று அந்த கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை 2 பிரதான கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் தான் மாற்றி மாற்றி ஆட்சியை பிடித்து வந்தன. ஒன்று தேசிய மாநாட்டு கட்சி. இந்த கட்சியின் தலைவராக முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளார். அதேபோல் மற்றொரு கட்சி என்னவென்றால் பிடிபி எனும் மக்கள் ஜனநாயக கட்சி. இந்த கட்சியின் தலைவராக மெகபூபா முப்தி உள்ளார். இதுபற்றி தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் ஷமிம் பிர்தௌஸ், “நாங்கள் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். தேர்தல் தேதி அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்” என்றார். ஜம்மு காஷ்மீரில் இதற்கு முன்பு கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. அதன்பிறகு 2018 ல் சட்டசபை கலைக்கப்பட்டது. அதன்பிறகு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதோடு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. தற்போது திட்டமிடப்பட்டபடி செப்டம்பர் மாதம் தேர்தல் நடந்தால் அது யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் சந்திக்கும் முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தான் ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் தேர்தலை நடத்த மத்திய அரசு ஆர்வம் காட்டுவதன் பின்னணியில் 2 முக்கிய காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதலாவது காரணம் என்னவென்றால் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆளும் ஆந்திர பிரதேசத்துக்கும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த முதல்வர் நிதிஷ் குமார் ஆட்சி செய்யும் பீகாருக்கும் மட்டுமே அதிக நிதி வழங்கியதாகவும், பிற மாநிலங்களுக்கு பிரத்யேக திட்டங்கள் வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதேபோல் அண்டை நாடான வங்கதேசத்தில் தற்போது மாணவர்கள் பிரச்சனை விஸ்வரூபமெடுத்து வன்முறையானது. இதனால் அந்த நாட்டின் பிரமதர் ேஷக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். வங்கதேசத்தில் சிறிய அளவில் நடந்த போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது வன்முறையாகி பிரதமரையே ராஜினாமா செய்ய வைத்துள்ளது. தற்போது ேஷக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதால் இஸ்லாமிய அமைப்புகளை எதிர்ப்பை சந்திக்கலாம். இதுபோன்ற அடுத்தடுத்து மத்திய அரசின் பெயர் டேமேஜ் ஆவதால் ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் தேர்தல் நடத்த மத்திய அரசு மும்முரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நன்றி oneindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *