நாட்டின் அனைத்து எக்ஸ்பிரஸ்வே சாலைகளிலும் பி.ஆர்.டி.எஸ் வசதிகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அந்த வகையில் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே மீது கவனம் திரும்பியுள்ளது.
பெங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ்வே
இது தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா என மூன்று மாநிலங்கள் வழியாக செல்கிறது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு காரணங்களால் எக்ஸ்பிரஸ்வே சாலை திறப்பு விழா தள்ளி போய் கொண்டிருக்கிறது. தற்போது பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு முதல் பாதியில் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பி.ஆர்.டி.எஸ் வசதி
மொத்தம் மூன்று கட்டங்களாக 10 பேக்கேஜ்களாக பணிகள் நடந்து வருகின்றன. சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலையில் பி.ஆர்.டி.எஸ் வசதிகள் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பெங்களூருவில் ”மேம்பால மேலாண்மையில் நவீனம்” என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி
இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் பி.ஆர்.டி.எஸ் வசதிகள் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். மேலும் பேசுகையில், 18 முதல் 20 மீட்டர் நீளமுள்ள எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடியும்.
டிக்கெட் கட்டணம் குறைவு
ஆங்காங்கே மின்சாரம் சார்ஜிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. டீசல் பேருந்துகளை காட்டிலும் இதில் பயணிக்க 30 சதவீதம் டிக்கெட் கட்டணம் குறைவு. பி.ஆர்.டி.எஸ் வசதியானது சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே, பெங்களூரு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு, டெல்லி – டேராடூன் உள்ளிட்ட திட்டங்களில் செயல்படுத்தப்படும்.
விரைவான பயணம்
இந்த முன்னெடுப்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு வருவாயை பெருக்கும். பொதுமக்களுக்கும் பயனளிக்கும் எனக் கூறினார். இதில் பி.ஆர்.டி.எஸ் (BRTS – Bus Rapid Transit System) என்பது பேருந்துகள் மட்டுமே பயனளிக்கும் வகையிலான பிரத்யேக வழித்தடம் ஆகும். இதில் நெரிசலின்றி விரைவான பயணிக்க முடியும்.