Chennai Day 2024 Celebrations : மெட்ராஸ் தற்போது பெயர்மாற்றப்பட்ட சென்னை தினம் இன்று (ஆகஸ்ட் 22) கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் தலைநகரமாக இருக்கும் சென்னை, ஆங்கிலேயர்கள் காலத்தில் முக்கிய இடமாக கொண்டு செயல்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் கட்டிய கட்டங்கள் முதல் அவர்களின் தடங்களை இன்னமும் சென்னையில் பார்க்க முடியும். இந்நிலையில், ஏன் சென்னை தினம் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கான காரணம் என்ன என்று யோசித்தது உண்டா?
History of Madras Day Celebration 2024 : இன்று (ஆகஸ்ட் 22) 385வது சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வெகு விமர்சையாக ஒவ்வொரு வருடமும் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமும், தென்னிந்தியாவின் முக்கிய நகரமான சென்னையில் இன்னும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் சுவடுகள் வரலாற்று அடையாளமாக இருக்கிறது. குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றம், சென்ட்ரல் ரயில் நிலையம், நேப்பியர் பாலம், சென்னை பல்கலைக்கழகம், தலைமை செயலகம் என ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கட்டிய கட்டங்கள் இன்றும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல மொழி, கலாச்சாரம், மக்கள், உணவு, உடை என சென்னை மக்களின் உணர்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், சென்னை தினம் ஏன் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
பிரிட்டிஷ் அரசின் கிழக்கு இந்திய கம்மெனி :
இந்தியாவின் செல்வ செழிப்பான வளர்ச்சியை பார்த்த பிரிட்டிஷ், வணிகத்திற்கான 1600ஆம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனியை தொடங்கினர். முதலில் மசூலிப்பட்டினத்தில் கம்பெனி அமைத்து வணிக ரீதியான வியாபரங்களில் இறங்கினர். அப்போது அவர்களுக்கு தென்னிந்தியாவில் கடல் பகுதிக்கு அருகில் கம்பெனி கட்ட ஒரு இடம் தேவைப்பட்டது. கம்பெனிக்கு நிலத்தை வாங்குவதற்காக ஆண்ட்ரூ கோகன் மற்றும் பிரான்சிஸ்டே என்ற இருவரை பிரிட்டிஷ் அரசு அனுப்பி வைத்தது. பிரிட்டிஷ் மட்டுமின்றி, டச்சுகள், ஸ்பெயின், போர்த்துகீசியர்கள் என வேறு நாட்டினர்களும் இந்தியாவில் வணிகம் செய்ய வந்தனர்.
சென்னை தினம் கொண்டாடப்பட காரணம் :
அப்படி நிலம் தேடும்போது புலிகாட் முதல் போர்த்துகீசியர்கள் வசித்த சான் தோம் வரை ஆண்ட உள்ளூர் மன்னர் டமர்லா வெங்கடபதி நாயக் மற்றும் அவரின் சகோதரர் ஐயப்ப நாயக்கர் ஆகியவர்களிடம் இருந்து ஒரு நிலத்தை வாங்கினார். அந்த நிலம் கடற்கரையில் இருந்து சற்று அருகில் கூவம் ஆற்றை ஒற்றிய பகுதியாக இருந்தது. நிலத்தின் பிரிட்டிஷ் வாங்கியதற்கும், அங்கு கம்பெனியை தொடங்கவும் டமர்லா வெங்கடபதி நாயக்-கிடம் அனுமதி பெற்ற ஒப்புதல் கையொப்பம் இடப்பட்ட நாள் 22, ஆகஸ்ட் 1639 ஆகும். இந்த நாளை தான் நாம் சென்னை நகரம் உருவான நாளாக சென்னை தினம் என கொண்டாடி வருகிறோம்.
கோட்டை கட்டிய பிரிட்டிஷ் :
1640ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் வாங்கிய நிலத்தில் ஒரு பெரிய கோட்டையை கட்டத் தொடங்கினர். அப்போது இருந்துதான் அப்பகுதி நகரம் என்ற வளர்ச்சியை அடைய தொடங்கியது. இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என பெயரிடப்பட்டது. கோட்டைக்கான கட்டுமான பணிகள் 1653ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. ஆங்கிலேயர்களுக்கு பணி செய்ய வந்தவர்கள், கோட்டை பணியில் ஈடுபட்டப்பட்டவர்கள் என புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி மக்கள் குடிப்பெயரத் தொடங்கினர். கோட்டைக்கு அருகில் இருந்த திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், எழுப்பூர் ஆகிய பகுதிகள் கோட்டையுடன் இணைந்து ஒரு நகரமாக மாறியது.
மதராசப்பட்டினம் Vs சென்னப்பட்டினம் :
கோட்டை மற்றும் ஆங்கிலேயர்கள் விரிவுப்படுத்திய பகுதி மதராசப்பட்டினத்திற்கு அருகில் இருந்ததால் அப்பகுதி உள்ளூர் மக்களால் மதராசப்பட்டினம் என்ற அறியப்பட்டது. அதே போன்று, கோட்டை கட்ட நிலம் வழங்கிய மன்னர் டமர்லா வெங்கடபதி நாயக், அவரின் தந்தை பெயரான சென்னப்ப நாயக் என்பதை நினைவுக்கூற சென்னப்பட்டினம் என்ற பெயரை அப்பகுதிக்கு சூட்டினார். அதனால் இந்த பெயரும் புழக்கத்தில் இருந்தது. கோட்டை மற்றும் சுற்றிள்ள பகுதிகள் இணைந்து நகரமாக உருவான நிலையில், வடக்கு பகுதி மதராசப்பட்டினம் என்றும், தெற்கு பகுதி சென்னப்பட்டினம் என்றும் அறியப்பட்டது. நாளடைவில் போர்த்துகீசியர்களினால் மெட்ராஸ் என அழைக்கப்பட்டு அதேவே நகரத்தின் பெயராக மாறியது.
சென்னை என பெயர் மாறிய மெட்ராஸ் :
1947ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்கு பின்னர் 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்படி மெட்ராஸ் மாகாணம் தனி மாநிலம் ஆனது. அதன்பின்னர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, மெட்ராஸ் மாகாணம் 1969ஆம் ஆண்டு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றப்பட்டது. தலைநகரமாக திகழ்ந்த மெட்ராஸ் 1996ஆம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றப்பட்டது.