சென்னை: குவாண்டம் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு இன்னும் 3 மாதங்களில் மானிய நிதி வழங்கப்படும் என தேசிய குவாண்டம் இயக்கத்தின் தலைவர் அஜய் சவுத்ரி கூறினார்.
குவாண்டம் கம்ப்யூட்டிங் தொடர்பான 5 நாள் சர்வதேச மாநாடு சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நேற்று தொடங்கியது. ஐஐடி குவாண்டம் தகவல் தொலைத்தொடர்பு மற்றும் கணினி மையம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டை தேசிய குவாண்டம் இயக்கத்தின் தலைவர் அஜய் சவுத்ரி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த சர்வதேச மாநாடு முதல்முறையாக இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதற்காக பெருமுயற்சி எடுத்த ஐஐடி-க்கு பாராட்டுகள். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் தேசிய குவாண்டம் இயக்கம் செயல்படுகிறது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களுடன் இணைந்து இந்தியாவில் குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சி திட்டங்கள் தொடர்பான விவரங்களை கண்டறிந்தோம்.
அதன்படி, குவாண்டம் தொழில்நுட்பத்துறையில் ஏறத்தாழ 600 விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 50 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இத்துறையில் சிறப்பாக இயங்கி வருகின்றன. குவாண்டம் தொழில்நுட்பங்களில் அனைத்து விஷயங்களிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
தேசிய குவாண்டம் இயக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு குவாண்டம் ஆராய்ச்சி பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக ஏறத்தாழ 385 முன்மொழிவுகள் வரப்பெற்றன. குவாண்டம் கம்ப்யூட்டிங் துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவர வேண்டும் என்பது எங்கள் திட்டம்.
இந்த ஆராய்ச்சி பணிகளில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் பெரிய அளவில் ஈடுபடுத்தப்படும். குவாண்டம் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ள 10 முதல் 15 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு இன்னும் 3 மாதங்களில் மானிய நிதி வழங்கப்படும். அந்நிறுவனங்கள் சர்வதேச அளவில் வளர வேண்டும்.
அதோடு குவாண்டம் கம்ப்யூட்டிங் துறை ஆராய்ச்சியில் ஈடுபடும் வகையில் முதலீடுகள் செய்ய முன்வருமாறு பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அப்போது ஏற்கெனவே பல சாப்ட்வேர் நிறுவனங்கள் குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகிறது எங்களுக்கு தெரியவந்தது.
சென்னை ஐஐடி குவாண்டம் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு கணினி ஆய்வு மையத்தை நிறுவி குவாண்டம் ஆராய்ச்சியில் முன்னணியில் திகழ்ந்து வருகிறது. குவாண்டம் கிரிப்டோகிராபி, குவாண்டம் சென்சிங், குவாண்டம் இன்பர்மேஷன் தியரி, குவாண்டம் நெட்வொர்க்ஸ் ஆகிய பிரிவுகளில் நவீன ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்திய குவாண்டம் தொழில்நுட்பத்துறையில் சிறந்து விளங்குகிறது.
குவாண்டம் தொழில்நுட்பத்துறை ஆராய்ச்சி பணிகள் வாயிலாக தேசிய குவாண்டம் இயக்கத்தில் சென்னை ஐஐடி முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசும்போது, “குவாண்டம் கம்ப்யூட்டிங் தொடர்பான சர்வதேசமாநாடு முதல்முறையாக இந்தியாவில் நடத்தப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றையகணினி உலகில் தீர்வு காண வேண்டிய தரவுகளும், சிக்கல்களும் மிகப்பெரிய அளவில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மிகவும் கடினமானவை. நமது பட்டறிவைக்கொண்டே இவற்றுக்கு தீர்வு காண முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்” என்றார்.
நன்றி hindutamil