சென்னை ஐஐடியில் 12 ரூபாய் 50 காசுக்கு எம்.டெக் படித்த முன்னாள் மாணவர், இன்று, 228 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.
சென்னை ஐஐடியில் 1970 ஆம் ஆண்டு ஏரோனாடிக்ஸ் பாடப்பிரிவில் எம்.டெக் படித்தவர் கிருஷ்ணா சிவுகுலா. பல்வேறு நாடுகளில் செயல்படும் இந்தோ-எம்ஐஎம் என்ற நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமான இவர், 1997-ஆம் ஆண்டு‘மெட்டல் இன்ஜெக்சன் மோல்டிங்’ எனப்படும் அதிநவீன பொறியியல் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார். அமெரிக்காவில் அப்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பமாக இது பார்க்கப்பட்டது. இரு தொழிற்சாலைகளை நடத்தி வரும் கிருஷ்ணா சிவகுலா, ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறார்.
இந்த நிலையில், தான் படித்த கல்வி நிறுவனத்திற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக, கிருஷ்ணா சிவுகுலா, சென்னை ஐஐடிக்கு 228 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். 54 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஐஐடிக்கு கிடைத்த அதிக நன்கொடை இதுவாகும்.
அகில இந்திய அளவில் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய அளவிலான இந்த நன்கொடை மூலம், சென்னை ஐஐடி மேம்பாட்டுப் பணிகள் மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கிருஷ்ணா சிவுகுலாவை கவுரவிக்கும் விதமாக கல்வி நிறுவனத்தின் தொகுப்பு ஒன்றுக்கு ‘கிருஷ்ணா சிவுகுலா பிளாக்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, முன்னாள் மாணவர் ஒருவர், தாம் படித்த கல்வி நிறுவனத்தை நினைவில் வைத்து செயலாற்றுவதை நினைத்து பெருமை கொள்வதாகக் கூறினார்.
வாழ்க்கையில் பலவற்றைச் சாதிக்க சென்னை ஐஐடி தனக்கு பக்கபலமாக உதவியதாக கிருஷ்ணா சிவுகுலா தெரிவித்தார். சென்னை ஐ.ஐ.டியில் 12 ரூபாய் 50 காசில் கிருஷ்ணா சிவுகுலா எம்.டெக் படித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நன்கொடை மூலம், சென்னை ஐஐடியில் படிக்கும் சர்வதேச மாணவர்களின் கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சிக்கான சிறப்பு மானியத் திட்டம், புதிய மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை , விளையாட்டு வீரர்களுக்கான பாடத்திட்டம், கிருஷ்ணா பிளாக் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.