Suriya 45 Music Director Changed : ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகியதால் அவருக்கு பதில் இளம் இசையமைப்பாளர் கமிட்டாகி உள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45

மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே.பாலாஜி. இதையடுத்து வீட்ல விசேஷம் படத்தை இயக்கி வெற்றிகண்ட அவர், அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் சூர்யா 45. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

சூர்யா 45 படக்குழு

சூர்யா 45 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்திற்கு பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணி அம்மன் கோவிலில் பூஜை போடப்பட்டு அங்கிருந்து படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகின்றனர். இப்படத்திற்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன்னர் விஜய்யின் மெர்சல், பிகில், ஷாருக்கானின் ஜவான் போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார். இப்படத்திற்கு முதலில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைப்பாளராக கமிட்டாகி இருந்தார்.

ஏ.ஆர்.ரகுமான் விலகல்

சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது திடீரென அப்படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகி உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இருப்பினும் அவர் எதற்காக விலகினார் என்கிற அப்டேட்டை படக்குழு வெளியிடவில்லை. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் ஒரு வருடம் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், அவர் சூர்யா 45 படத்தில் இருந்து அவர் விலகி இருப்பதால், ஒருவேளை அதுகூட காரணமாக இருக்கலாம் என்றும் தகவல் பரவி வருகிறது.

சூர்யா 45 படத்தின் புது இசையமைப்பாளர் யார்?

ஏ.ஆர்.ரகுமான் விலகியதால் அவருக்கு பதில் யார் இசையமைப்பாளர் ஆகப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதுகுறித்த அறிவிப்பை படக்குழுவே வெளியிட்டுள்ளது. அதன்படி கட்சி சேரா, ஆசை கூட போன்ற சுயாதீன பாடல்களுக்கு இசையமைத்து தற்போது சென்சேஷனல் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் வலம் வரும் சாய் அபயங்கர் தான் சூர்யா 45 படத்துக்கு இசையமைக்க உள்ளாராம்.

யார் இந்த சாய் அபயங்கர்?

இந்த சாய் அபயங்கர் வேறுயாருமில்லை… பாடகர் திப்பு, பாடகி ஹரிணி ஜோடியின் மகன் தான் இவர். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் பென்ஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கும் சாய் அபயங்கர் தன் இரண்டாவது படத்திலேயே சூர்யா போன்ற மாஸ் ஹீரோவுக்கு இசையமைக்க கமிட்டாகி உள்ளதால், அனிருத் போல் அடுத்த சென்சேஷனல் இசையமைப்பாளராக அவர் உருவெடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

Nandri asianetnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *