தமிழக அரசு முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 6ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2024.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு, ஊக்கத்தொகை என பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அந்த வகையில் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
விளையாட்டுத்துறையில் சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000/- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.inமூலம் வரவேற்கப்படுகிறது.
தகுதிகள்
(அ) குறைந்தபட்ச தகுதி
சர்வதேச / தேசிய போட்டிகளில் முதலிடம் / இரண்டாமிடம் / மூன்றாம் இடங்களில் வெற்றிபெற்றிருத்தல் வேண்டும்.
சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும்.
(ஆ) தகுதியான விளையாட்டுப் போட்டிகள்
ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள்.
ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம் / இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட / தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச / தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.
அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள்.
(இ) வயதுவரம்பு
2024ம் வருடம் 31 ஆகஸ்ட் மாதம் (31.08.2024) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
(ஈ) மாத வருமானம்
ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் / மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran / Masters Sports Meet) வெற்றிபெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000/-ஆக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
இணையதளத்தில் விண்ணப்பிக்க துவக்க நாள் : 01.09.2024
இவ்வாணைய இணையத்தில் விண்ணபிக்க கடைசி நாள் மற்றும் நேரம் : 30.09.2024 மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தைச் சார்ந்த சிறந்த முன்னாள் விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.