காந்தி நகர்: குஜராத்தின் சூரத் அருகே 5 மாடிகளை கொண்ட கட்டடம் நேற்று திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் ஏராளமானவர்கள் சிக்கிய நிலையில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் சிக்கி உள்ளதாக சந்தேகிக்கப்படும் சூழலில் 2வது நாளாக மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என அஞ்சப்படுகிறது.
குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலிகாம் என்ற பகுதி உள்ளது. இங்கு டிஎன் நகர் எனும் இடத்தில் அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்துடன் இந்த அடுக்குமாடி கட்டங்களில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் நேற்று தரைதளம் + 5 மாடிகளை கொண்ட கட்டடம் திடீரென்று இடிந்து விழுந்தது. நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் இந்த கட்டடம் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்தது. கட்டடத்தில் வசித்தவர்கள் இடிபாடுகளுக்கும் சிக்கி கொண்டனர். அதாவது அந்த பகுதியில் உள்ள ஜவுளி பணியாளர்கள் தங்களின் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவர்கள் தான் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். இந்த கட்டடம் இடிந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசார், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியை தொடங்கினர். அதுமட்டுமின்றி மாநில தேசிய பேரிடர் மீட்பு படையினர், தேசிய மீட்பு படையினரும் வரழைக்கப்பட்டனர். இவர்களும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதுபற்றி சூரத் போலீஸ் துணை ஆணையர் ராஜேஷ் பர்மார் கூறுகையில், ‛‛இடிந்து விழுந்த கட்டடத்தின் ஒவ்வொரு மாடியிலும் 5 முதல் 6 வீடுகள் இருந்துள்ளன. இதில் சில வீடுகளில் மட்டுமே மக்கள் இருந்துள்ளனர். இந்த வீடுகளில் சச்சின் ஜிஐடிசி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் நபர்களின் குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. பல வீடுகள் காலியாக இருந்துள்ளன. தற்போது மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது” என்றார். இதற்கிடையே தான் இந்த கட்டடம் இடிந்தது எப்படி? என்பது பற்றிய விசாரணை தொடங்கி உள்ளது. அதாவது தற்போது இடிந்து விழுந்த கட்டடம் என்பது 2016-2017 ம் ஆண்டில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக அந்த பகுதியில் மழை பெய்தது. இதனால் மழையின் காரணமாக அந்த கட்டடம் இடிந்து விழுந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
நன்றி oneindia.com