இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருக்கின்றனர். இந்தியா சார்பில் 34 பெண்கள் உள்பட 84 பேர் பங்கேற்று இருக்கின்றனர். இதில் பெண்களுக்கான பேட்மிட்டன் ஒன்றையர் பிரிவில் SU5 பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், தங்கை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தி இருந்தனர்.
சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனைப் படைத்த அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று பேட்மிண்டனில் SH6 பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நித்யா ஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்திருக்கிறார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருக்கிறது. பிரதமர் மோடி, அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பலரும் நித்யா ஸ்ரீ சிவனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த நித்ய ஸ்ரீ சிவன்?
19 வயதான நித்ய ஸ்ரீ சிவன் ஓசூரைச் சேர்ந்தவர். பேட்மிட்டனில் சிறந்து விளங்கும் இவருக்கு முதலில் கிரிக்கெட்தான் மிகவும் பிடித்த விளையாட்டாக இருந்திருக்கிறது. ஆனால், 2016 ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்ஸுக்குப் பிறகு, அவர் பேட்மிண்டனைப் பின்தொடரத் தொடங்கி இருக்கிறார். நித்யாவின் ரோல் மாடல் லின் டான். அவருடைய கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கிய பிறகு அவருக்கு பேட்மிண்டன் மீதான ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.
நிதி நெருக்கடி காரணமாக வாரத்திற்கு இரண்டு நாள்கள் மட்டுமே அவரால் பயிற்சி பெற முடிந்திருக்கிறது. இருப்பினும் அவரது திறமையைக் கண்ட அவரது பயிற்சியாளர் விளையாட்டை மேலும் தீவிரமாகத் தொடர வலியுறுத்தி இருக்கிறார். தொடர்ந்து தனது கடின உழைப்பையும், உறுதியையும் கொண்ட அவர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கி இருக்கிறார். பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகள் 2021 -ல் அவர் பெண்கள் ஒற்றையர் SH6 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
டோக்கியோவில் நடைபெற்ற 2022 உலக சாம்பியன்ஷிப்பில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார். நித்ய ஸ்ரீ சிவன் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். தற்போது இந்த பாரா ஒலிம்பிக்ஸிலும் வெண்கலம் வென்று தன்னை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டி இருக்கிறார்.
வாழ்த்துகள் நித்ய ஸ்ரீ சிவன்!