சொன்ன பேச்சைக் கேட்காத மாணவிகளுக்குக் கல்லூரி முதல்வர் கொடுத்த நூதன தண்டனையால் மாணவிகள் மயங்கிவிழுந்தனர். அவர்களைப் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கல்லூரி மாணவர்கள் தவறு செய்தால் அதற்கு ஆசிரியர்கள் கொடுக்கும் தண்டனை சில நேரங்களில் நூதனமாக இருக்கும். அதுவும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வழக்கமான தண்டனை என்றால் அது அமர்ந்து எழுவது போன்றது ஆகும். நின்று கொண்டு அப்படியே குனிந்து எழவேண்டும். அப்படித் தொடர்ந்து செய்வதால் மூட்டு வலி அதிக அளவில் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்படும்.
ஆந்திராவில் கல்லூரி முதல்வர் ஒருவர் மாணவிகளுக்கு அது போன்ற ஒரு தண்டனை கொடுத்ததால் அனைத்து மாணவிகளும் மயங்கி விழுந்துள்ளனர். சீதாராமா ராஜு மாவட்டத்தில் உள்ள அல்லுரி என்ற இடத்தில் அரசு நடத்தும் ஏ.பி.ஆர்.பெண்கள் ஜூனியர் கல்லூரி இருக்கிறது. இக்கல்லூரியில் ஒன்றாவது மற்றும் இரண்டாவது ஆண்டு படிக்கும் மாணவிகள் கல்லூரி முதல்வர் கிருஷ்ணகுமாரியின் பேச்சைக் கேட்டு நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் 50 மாணவிகளுக்குக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணகுமாரி நூதன தண்டனை கொடுத்தார். தினமும் மூன்று நாட்கள் 100 முதல் 200 முறை அமர்ந்து எழவேண்டும். இரண்டு நாட்கள் அத்தண்டனையை அனுபவித்த மாணவிகள் மூன்றாவது நாள் அப்படியே கீழே விழுந்துவிட்டனர். அவர்களில் சிலர் மயங்கிவிட்டனர். இது குறித்து கல்லூரி நிர்வாகம் பெற்றோர்களுக்குத் தகவல் கொடுத்தது. பெற்றோர் விரைந்து வந்து மாணவிகளை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவிகள் மயங்கி விழுந்துவிட்டதாகவும், அவர்கள் கடுமையான கால் வலிக்கு ஆளானதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இத்தண்டனைக்குக் குறித்து உள்ளூர் எம்.எல்.ஏ.மிரியலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது கேவலமான செயல் என்றும், இது போன்ற செயல்களை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். இது போன்ற தண்டனையை மாணவிகளுக்குக் கொடுக்கக்கூடாது என்றும், நடந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
50 மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களால் நடக்க முடியவில்லை. துணை மாவட்ட கலெக்டர் மாணவிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார். கல்லூரி முதல்வர் தங்களைக் கழிவறை மற்றும் பாத் ரூம்பை சுத்தம் செய்யச் சொல்வதாக மாணவிகள் குறிப்பிட்டனர். கல்லூரி முதல்வரை உடனே பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.