icon

minister

சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் சிஎஸ்ஆர் நிதி மூலம் பள்ளிக்கல்வித் துறைக்குரூ.380 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித் துறையின் நம்மஸ்கூல் நம்ம ஊரு பள்ளி (NSNOP) திட்டத்தின் கீழ் விருட்சா நிறுவனத்தின் பங்களிப்புடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கணினி ஆய்வகத்தின் திறப்புவிழா நேற்று நடைபெற்றது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் எவ்வாறு தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் வகையிலான ‘லீடர் இன் மீ’ பயிற்சி திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சமூகத்துக்கு நம்மால் ஆன பங்கை அளிக்கும் வகையில் சிஎஸ்ஆர் செயல்திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்றைக்கு 3 பள்ளிகளுக்கு விருட்சா நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்த கணினி ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிஎஸ்ஆர் செயல்திட்டங்களை தொடங்கிவைக்கும்போது முதல்வர் ஸ்டாலின்தான் முதன்முதலாக ரூ.5 லட்சம் நிதிஅளித்து தொடங்கி வைத்தார். இன்றைக்கு சிஎஸ்ஆர் நிதிமூலம் பள்ளிக்கல்வித் துறைக்கு இதுவரை ரூ.380 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு நமது அரசின் மீதும், முதல்வர் மீதும் தன்னார்வலர்கள் வைத்துள்ள நம்பிக்கைதான் காரணம். கல்வி என்பது சமூகத்தின் மிகப்பெரிய ஆயுதம். நாம் எல்லாம் சமமாக இருக்கிறோம் என்றால் அதற்கு கல்வி மிக மிக முக்கியம்.

ஆசிரியர்களிடம் அடிவாங்காத மாணவன் பிற்காலத்தில் வாழ்க்கையில் பாதிக்கப்படுவான். இதை சொன்னாலே எல்லாரும் கோபப்படுவர். ஆனால் அது மாணவர்களின் நன்மைக்காக மட்டும் தான். அனைத்து மாணவர்களும் நன்கு படித்து முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகிற ஓரே இனம் ஆசிரியர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறைஇயக்குநர் கண்ணப்பன், அரசு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் இரா.சுதன், எம்எல்ஏ எழிலன், விருட்சா நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 நன்றி hindutamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *