சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகி சிவாவுக்கு பெரும் திருப்புமுனையை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. மேலும் சூர்யாவின் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் ஞானவேல் ராஜா பேசியிருக்கும் விஷயத்தை வைத்து நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துவருகிறார்கள்.
சூர்யாவின் கரியரிலேயே கங்குவா படத்துக்கான பட்ஜெட்தான் அதிகம். மேலும் சிவா சூர்யாவை வைத்து சம்பவம் செய்வாரா இல்லை சரித்திரம் படைப்பாரா என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். ஏனெனில் சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. கங்குவா இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் பிஸ்னெஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் சூர்யாவின் கரியரில் முதன்முறை என்பது கவனிக்கத்தக்கது.
க்ளிம்ப்ஸ்: சிவா இயக்கத்தில் சூர்யா கமிட்டட் என்று செய்தி வெளியானதும் சூர்யா ரசிகர்கள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். ஏனெனில் இதற்கு முன்னதாக சிவா இயக்கிய அண்ணாத்த படம் அவர்கள் கண் முன் வந்துபோனது. ஆனால் தன் மேல் சந்தேகப்பட்டவர்களுக்கு கங்குவா க்ளிம்ப்ஸ் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குநர். க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது நம்பிக்கை பிறந்திருக்கிறது.
என்ன கதை: கங்குவா படம் முழுக்க பீரியட் படமாக உருவாக்கப்படும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை. குறிப்பிட்ட பகுதி மட்டும்தான் பீரியட் படமாக கங்குவா உருவாகிறது. மற்றபடி நிகழ்காலத்தில் நடக்கும்படிதான் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் சிவா. அதேபோல் அந்த பீரியட் பகுதிதான் 3டியில் படமாக்கப்படும் என கூறப்படுகிறது. முக்கியமாக சிவா இயக்கிய அண்ணாத்த படம் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. எனவே இந்தப் படத்தின் மூலம் அதற்கு பதிலடி கொடுக்க சிவா மும்முரமாக உழைத்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்திருக்கிறது.
இரண்டு பாகங்கள்: மேலும் கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்க்கை சிவா முடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கண்டிப்பாக முதல் பாகம் மெகா ஹிட்டாகும்; எனவே இரண்டாம் பாகத்தையும் அதற்கு பிறகு வெளியிட்டால் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. வேட்டையனுடன் மோதுமா இல்லை சோலோவாக ரிலீஸாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஞானவேல் ராஜா பேட்டி: இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “கங்குவா படத்தின் முதல் பாகத்தோடு யார் வேண்டுமானாலும் போட்டி போடலாம். ஆனால் கங்குவா படத்தின் இரண்டாம் பாகத்தோடு யாருமே போட்டி போட முடியாது என்பதில் 100 சதவீதம் நம்பிக்கையோடு இருக்கிறேன்” என்று கூறியிருந்தார். அஞ்சான் மாதிரி ஆக்கிடாதீங்க: இதனைப் பார்த்த நெட்டிசன்ஸ் ஞானவேல் ராஜாவை கலாய்த்து தள்ளுகின்றனர். அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா அஞ்சான் படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய லிங்குசாமி, ‘கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இதில் இறக்கியிருக்கேன்’ என்று சொன்னார். ஆனால் படம் படுதோல்வியடைந்தது. அதுபோல் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக இவ்வளவு பேசி கங்குவாவையும் அஞ்சான் மாதிரி ஆக்கிடாதீங்க ஞானவேல் சார் என்று நெட்டிசன்ஸ் கடுமையாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
நன்றி filmibeat