sports

பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை ஆறு பதக்கங்கள் வென்று இருக்கும் போதும், பதக்கப் பட்டியலில் மிகவும் பின்தங்கி உள்ளது. தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 69 வது இடத்தில் உள்ளது. இப்போதைய சூழ்நிலையில் இந்தியா பதக்கப் பட்டியலின் தர வரிசையில் முன்னேற வேண்டும் என்றால் நிச்சயமாக ஒரு தங்கப் பதக்கமாவது வென்றால் மட்டுமே அது முடியும்.

2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு இன்னும் இரண்டு விளையாட்டுகள் மட்டுமே மீதம் உள்ளன. அதில் இந்தியா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றால் கூட பதக்கப் பட்டியலில் 64வது இடத்தை மட்டுமே பெற முடியும். அதே சமயம், இந்தியா ஒரு தங்கப் பதக்கத்தை வென்றால் 45 வது இடத்துக்கு முன்னேற முடியும். அதற்கான வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து பார்ப்போம்.

தற்போது இந்தியாவுக்கு மகளிர் கோல்ஃப் மற்றும் மகளிர் 76 கிலோ மல்யுத்த போட்டி மட்டுமே மீதம் உள்ளன. கோல்ஃப் விளையாட்டில் மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிரிவில் இந்தியாவின் தீக்ஷா தாகர் மற்றும் அதிதி அசோக் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளனர். ஏனெனில், ஒலிம்பிக் கோல்ஃப் விளையாட்டில் உலக அளவில் இவர்களை காட்டிலும் முன்னணி வீராங்கனைகள் பலர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், ஒரே சுற்றில் பல நாடுகளை சேர்ந்தவர்களுடன் இவர்கள் போட்டியிட வேண்டும் என்பதால் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. மல்யுத்தப் போட்டியில் 76 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ரீத்திகா ஹூடா பங்கேற்கிறார். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் 76 கிலோ எடை பிரிவில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

மல்யுத்தப் போட்டிகளைப் பொறுத்தவரை பல சுற்றுகளில், தனி நபருக்கு எதிராக விளையாட வேண்டும் என்பதால் இதில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகளும் அதிகம். ஏற்கனவே, இந்தியா மல்யுத்தத்தில் ஒரு வெண்கலப் பதக்கம் வென்று இருக்கிறது. இந்தியாவின் அமன் செஹ்ராவத் ஆடவர் 57 கிலோ மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்று இருக்கிறார்.

வினேஷ் போகட், நிஷா தாஹியா ஆகியோரும் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புக்கு மிக அருகே வந்து அதை தவறவிட்டனர். அதை கருத்தில் கொண்டு பார்க்கும்போது ரீத்திகா ஹூடா மல்யுத்தத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது. அவர் தனது முழு திறமையும் பயன்படுத்தினால் நிச்சயம் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கலாம். மேலும், இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைக்க இது மட்டுமே ஒரே வாய்ப்பாக உள்ளது. ஒருவேளை ரீத்திகா ஹூடா வெண்கலப் பதக்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் வென்றால் கூட இந்தியா தர வரிசையில் பின்தங்கிய நிலையிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி mykhel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *