புது டெல்லி: டெஸ்ட் கிரிக்கெட் மாறி வருகிறது. இங்கிலாந்து பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் வழிகாட்டிய பாஸ்பால் ஆக்ரோஷ பேட்டிங் அணுகுமுறை எல்லா அணிகளையும் தொற்றிக் கொண்டு வருகிறது. இந்தியா இதில் ஒருபடி மேலே போனதை கான்பூர் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான வெற்றியில் பார்த்தோம்.
இங்கிலாந்து அணி முல்டானில் பாகிஸ்தான் எடுத்த 556 ரன்களுக்கு எதிராக 832 ரன்களை 150 ஓவர்களில் எடுத்து பிறகு பாகிஸ்தானுக்கு இன்னிங்ஸ் தோல்வியைப் பரிசாக அளித்தனர். எனவே கிரிக்கெட் அல்ட்ரா – ஆக்ரோஷ மாதிரியைக் கைகொண்டு வருகிறது. ஆகவே 2 நாட்கள்தான் இருக்கிறது. லொட்டு வைத்து ஆளுக்கொரு சதம் அடித்து புள்ளிவிவரங்களை வலுப்படுத்துவோம் என்னும் பழைய ‘பஜனை’ இனி எடுபடவே படாது. இதைத்தான் இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கம்பீரும் வலியுறுத்தியுள்ளார்.
“ஒரே நாளில் 400 அடிக்கவும் தெரிய வேண்டும். 2 நாட்கள் ஆடி டிரா செய்ய வேண்டுமா, அதைச்செய்யவும் தெரிய வேண்டும். அந்த டைப் அணியாக நாம் மாற விரும்புகிறேன். நீங்கள் அதை வளர்ச்சி என்று கூறுங்கள். சூழ்நிலைக்கேற்ப தகவமைத்தல் என்று சொல்லுங்கள், அல்லது டெஸ்ட் கிரிக்கெட் என்று சொல்லுங்கள் ஒரே மாதிரி ஆடிக் கொண்டிருந்தால் முன்னேற்றம் இருக்காது. நான் உலக கிரிக்கெட்டைப் பற்றி பேச முடியாது. ஏனெனில் ஒவ்வொரு அணிக்கான டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டக் கொள்கைகள் மாறுபடும். நான் என் அணியைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.
2 நாட்கள் போராடி டெஸ்ட்டை டிரா செய்ய வேண்டுமா அதற்கும் நம்மிடம் வீரர்கள் இருக்கிறார்கள். நமது முதல் நோக்கம் வெற்றியே. அப்படியே சூழ்நிலை மாறி போராடி டிரா செய்ய வேண்டுமா அதற்கும் தயாராக இருப்பதும் எங்கள் நோக்கம். இப்படி சவாலான டெஸ்ட் கிரிக்கெட் தான் எங்களுக்குத் தேவை. வீரர்கள் களத்தில் இறங்கி ஆக்ரோஷமாக தங்கள் இயல்பான ஆட்டத்தை ஆட விரும்புகிறோம். ஒரே நாளில் 400-500 ரன்கள் குவிக்க முடியும் என்றால் ஏன் அதைத் தடுக்க வேண்டும்? அதிக ரிஸ்க் எடுப்பது அதிகப் பலன்களைத் தரும்.
சில வேளைகளில் அதிக ரிஸ்க் எதிர்மறையாகப் போகும். ஆனால் கவலையில்லை. சில வேளைகளில் இந்த ஆட்ட முறையில் 100 ரன்களுக்குக் கூட ஆட்டம் இழக்கலாம். ஆனால் கவலையில்லை. அதற்காக வீரர்களை மாற்றப்போவதில்லை. இப்படித்தான் நாட்டு மக்களுக்கு கேளிக்கை அளிக்க விரும்புகிறோம். இப்போது எங்கள் கவனம் நியூசிலாந்துக்கு எதிரான தொடர், பிறகு ஆஸ்திரேலியா, பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல். நியூசிலாந்து ஒரு வித்தியாசமான சவால். அங்கு நமக்கு சவாலான வீரர்கள் உள்ளனர். ஆனால் அணுகுமுறையில் மாற்றமில்லை” என்றார் கம்பீர்.