பெய்ரூட்: லெபனானில் பேஜர்கள் வெடித்ததில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று, பாலஸ்தீன ஆதரவு நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. இப்படி இருக்கையில், இந்த தாக்குதலுக்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பாலஸ்தீன போர்: ஆரம்ப காலத்தில் இஸ்ரேல் என்கிற ஒரு நாடே கிடையாது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜெர்மன் தாக்குதலுக்கு பயந்து புலம்பெயர்ந்த ஜியோனிஸ்ட்கள் எனப்படும் ஒரு இனக்குழுக்கள்தான் இஸ்ரேலை உருவாக்கினார்கள். பாலஸ்தீனத்தை உடைத்துதான் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. இதற்கு பின்னால் அமெரிக்காவும், பிரிட்டனும் இருந்தது தனிக்கதை. இப்படி உருவான இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக முழு பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமிக்க தொடங்கியது. இதுதான் போரின் தொடக்கப்புள்ளி.
தற்போதைய நிலவரம்: அவ்வப்போது பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும், இதற்கு எதிராக பாலஸ்தீன விடுதலை குழுக்கள் பதில் தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாக இருந்து வந்தது. இப்படி இருக்கையில், முதன் முறையாக இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று தாக்குதலை நடத்தியது. இதில் 1000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அவர்களின் சடலங்கள் கிடைக்காததால், இந்த இறப்புகளை உறுதி செய்ய முடியவில்லை. இஸ்ரேலின் பேரழிவு தாக்குதல்: இருப்பினும், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக அறிவித்த இஸ்ரேல் தீவிர போரை அறிவித்தது. இந்த போரில் இது வரை 41,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பசியும், சுகாதார பாதிப்புகளும் அம்மக்களை துரத்திக்கொண்டிருக்கிறது.
உள்ளே வந்த ஹிஸ்புல்லா: பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தினால், அண்டை இஸ்லாமிய நாடுகள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. குறிப்பாக லெபனானிலிருந்து இயங்கி வரும் ஹில்புல்லா அமைப்பு, இந்த போரின் போக்கையே மாற்றும் அளவுக்கு தலையீடு செய்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தொடர் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது. ஒரு கட்டத்தில் ஹமாஸை கூட சமாளித்துவிடலாம் போல.. ஆனா ஹிஸ்புல்லாவை சமாளிப்பது தலைவலியாக இருக்கிறது என்பதை இஸ்ரேல் உணர்ந்துக்கொண்டது. ஆனால், அதிகாரப்பூர்வமாக லெபனான் மீது இஸ்ரேலால் போரை தொடுக்க முடியாது. அப்படி செய்தால் ரஷ்யா இந்த போரில் தலையிட தொடங்கிவிடும். அப்படி மட்டும் நடந்தால், இஸ்ரேலின் கதை மொத்தமாக முடிந்துவிடும். எனவே, என்ன செய்வது என்று யோசித்து வந்த இஸ்ரேல் தற்போது பேஜர் தாக்குதலை நடத்தியிருக்கிறது. காரணம்: இதற்கு முக்கிய காரணம், இஸ்ரேல் பாதுகாப்பு படை உயர் அதிகாரி ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதல்தான். நேற்று காலை டெல் அவிவில், இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்புப்படை உயர் அதிகாரி ஒருவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது. இதை நடத்தியது ஹிஸ்புல்லா என்று சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில், இதற்கு பழிவாங்கவே, அடுத்த சில மணி நேரங்களில் இந்த பேஜர் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
தகவல் தொழில்நுட்ப துறையில் இஸ்ரேல் மிகப்பெரிய புலி. எந்த நாட்டிலிருந்தும், எவ்வளவு பலம்வாய்ந்த நெட்வொர்க்கிலிருந்தும் தகவல்களை இஸ்ரேலால் சுருட்ட முடியும் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், பேஜர் பயன்பாடு இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வந்தது. காரணம் பேஜர் தகவல்களை திருட முடியாது. எனவே பழிவாங்க இதனை பயன்படுத்தி கொண்டதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் பொதுமக்கள் கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
நன்றி oneindia