vote

7

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

லோக்சபா தேர்தல் முடிந்து பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்து, 100 நாட்களை எட்டியுள்ளது. இந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக இந்த, 100 நாட்களில் ஒவ்வொரு துறையும் ஆலோசனை நடத்தி, தங்களுடைய பரிந்துரைகளை அளித்துள்ளன.

இது தொடர்பாக அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:

பார்லிமென்ட், சட்டசபை மற்றும் மாநாகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, தன் பரிந்துரைகளை அளித்துள்ளது.
இந்த முறையை, இந்த ஆட்சிகாலத்துக்குள் அமல்படுத்த மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போதும், சமீபத்தில் செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழா உரையின்போதும், பிரதமர் நரேந்திர மோடி இதை வலியுறுத்தினார்.
இது தொடர்பாக, சட்டக் கமிஷன் தன் பரிந்துரைகளை விரைவில் அளிக்க உள்ளது. அதைத் தொடர்ந்து, இந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆட்சி காலத்துக்குள் இதை நடைமுறைபடுத்தி, 2029 தேர்தலில் அறிமுகம் செய்ய, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்க மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவில் துவக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரூ. 3 லட்சம் கோடி திட்டங்கள்

பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள தே.ஜ., கூட்டணி அரசு, முதல், 100 நாட்களில், மஹாராஷ்டிராவில் வாத்வான் துறைமுகம் அமைப்பது, 25,000 கிராமங்களில் 62,500 கி.மீ., தொலைவுக்கு சாலை வசதி ஏற்படுத்துவது உட்பட, மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கான உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *