‘கடற்கன்னிகள் உண்மையில் இருக்கிறார்கள்’ என்று யாராவது உங்களிடம் சொன்னால் நம்புவீர்களா?
இங்கு கடற்கன்னிகள் என்று சொல்ல வருது மீன் போல வால் கொண்டவர்கள் பற்றியல்ல.
இவர்கள் நாளொன்றுக்குப் பலமுறை ஆழ்கடலுக்குள் சென்று, அங்கு பல நிமிடங்கள் தங்களின் மூச்சை அடக்கி டைவ் செய்யும் பெண்கள் ஆவார்கள்.
பல நூற்றாண்டு காலமாக தென்கொரியாவின் ஜெஜூ தீவுகளை சேர்ந்த ஹேன்யோ டைவர்கள் எனப்படும் ஒரு பெண்கள் குழு ஆக்ஸிஜன் உதவி இன்றி கடலுக்குள் டைவ் செய்து கடல்வாழ் உயிரினங்களை பிடித்து வருகிறார்கள்.
இந்த குழுவில் பெரும்பாலானோர் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளார்கள். ஏன் என்றால் தற்போது இந்த தொழில் செய்ய சில இளம்பெண்கள் மட்டுமே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த குழுவின் மரபும் வாழ்வியலும் அழியும் நிலையில் உள்ளன. கடலில் ஏற்படும் மாற்றங்களும் இதற்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இவர்களின் இந்த கதையை கொரிய திரைப்பட இயக்குநர் ஸூ கிம் (Sue Kim) ‘தி லாஸ்ட் ஆஃப் தி சீ வுமன்’ ( The Last of the Sea Women) எனும் ஆவணப்படம் மூலம் உலகிற்கு கூற நினைத்தார். இதற்காக பெண் கல்வி ஆர்வலரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசஃப்சாய் உடன் இணைந்து அவர் பணியாற்றினார்.
படம் உருவானது எப்படி?
அமெரிக்காவில் வாழும் ஸூ கிம் கொரிய வம்சாவளியை சேர்ந்தவர். அவர் தென் கொரியாவிற்கு விடுமுறைக்காக சென்றபோதுதான் ஹேன்யோ பெண்கள் குழு பற்றி தெரிந்துகொண்டார்.
“நீங்கள் படத்தில் பார்த்தது போலவே அவர்களின் மன வலிமை மற்றும் நம்பிக்கை எனக்கும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. சிரிப்போ சண்டையோ… அவர்கள் எந்த ஒரு தயக்கமுமின்றி தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வந்தனர்”, என்று ஸூ கிம் கூறினார்.
“சிறுவயதில் இருந்தே இவர்களை நான் மிகவும் நேசித்தேன். அதனாலேயே இவர்கள் மீது எனக்கு ஆர்வம் அதிகரித்தது. நான் பெரிதும் ஈர்க்கப்பட்ட, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்று நினைத்த கொரிய பெண்கள் இவர்களே”, என்றும் அவர் கூறினார்.
“எல்லாரையும் போலவே எனக்கும் இந்த பெண்கள் குழுவை பற்றி முன்பு தெரியாமல் இருந்தது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இவர்களை பற்றி தெரியவந்த உடன் இந்த ஆவணப்படத்தை தயாரிக்க உடனே ஒப்புக்கொண்டேன்”, என்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் மலாலா.
“இவர்கள் தான் ஹேன்யோ பெண்கள் குழுவின் கடைசி தலைமுறை என்று எனக்கு 10 வருடங்களுக்கு முன்பு தெரியவந்தது. அப்பொழுதே உடனடியாக இதை ஆவணப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன். அவர்களின் கதையை அவர்களே தங்கள் வார்த்தைகள் மூலம் ஆவணப்படுத்துவது மிகவும் முக்கியமானது”, என்று ஸூ கிம் தெரிவித்தார்.
“ஒரு நாளில் 300 முறை வரை கடல் ஆழம் செல்வோம்”
இந்த குழுவை சேர்ந்த பெண்கள் அன்றாட வாழ்க்கையில் கடலுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் சவால்கள் மற்றும் கடல் உயிரினங்களை பிடிக்க செல்லும்போது இந்த பெண்கள் செய்யும் கடின உழைப்பை பற்றியும் இந்த படத்தில் பேசப்படுகின்றது.
இந்த பெண்கள் தினமும் காலை 6 மணிக்கு கடலுக்கு செல்வார்கள். அவர்கள் மூச்சை அடக்கி சில நிமிடங்கள் கடலுக்குள் டைவ் செய்கின்றனர். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 100 முதல் 300 முறை வரை கடல் மேற்பரப்பிற்கு வந்து மூச்சு வாங்கிக்கொண்டு மீண்டும் கடலின் ஆழத்துக்கு செல்கின்றனர்.
நான்கு மணி நேரம் கடல் ஆழத்தில் கடல் உயிரினங்களை பிடித்த பிறகு, அவர்கள் 2 முதல் 4 மணி நேரம் வரை அதை சுத்தப்படுத்தி விற்பனைக்காக தயார் செய்கின்றனர். இவ்வாறு பணி செய்வதால் அவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களது உடல்நலம் மிகவும் சீராக உள்ளது.
முதலில் ஆண்கள் மட்டுமே செய்து வந்த இந்த தொழிலை பின்னர் பெண்களும் செய்யத் துவங்கியது எப்படி என்பது குறித்துப் பல கருத்துகள் நிலவிவருகின்றன.
மீன் பிடிக்கச் செல்லும்போது கடல் சீற்றம் காரணமாக பல ஆண்கள் உயிரிழந்து உள்ளனர், இதனால் இங்கு மொத்த மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்தது என்று ‘விசிட் ஜெஜூ’ எனும் இணையதளம் கூறுகிறது.
இந்த தொழிலை செய்ய ஆண்கள் அதிகம் இல்லாததால், பெண்களும் பணியாற்ற தொடங்கினர்.
‘வயதானவர்களாகக் காட்டப் போவதில்லை’
ஹேன்யோ பெண்களைப் பற்றி வெளிவரும் முதல் ஆவணப்படம் இதுவே. படப்பிடிப்பிற்கான அனுமதியைப் பெறுவது மிகவும் கடினமாக இருந்ததாக கூறுகிறார் ஸூ கிம்.
“ஹேன்யோ குழுவிற்கு வெளியுலகம் பற்றிய போதிய விவரமில்லை. அவர்கள் சிறிய மீன்பிடி கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதால் ஜெஜூ நகரத்துடன் அவ்வளவு தொடர்பில்லாதர்வகளாக இருந்தார்கள்”, என்று ஸூ கிம் கூறுகிறார்.
இந்தக் கிராமத்தை சேர்ந்தவர்களை ஒரு ஆராய்ச்சியாளரின் உதவியுடன் ஸூ கிம் அணுகினார்.
“அந்த ஆராய்ச்சியாளர் மூலம் எனக்கு ஹேன்யோ மக்கள் பழக்கமானார்கள். அவர்களுடன் இரண்டு வாரங்கள் தங்கி இருந்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையை கேட்டும் கவனித்தும் அந்த மக்களின் நம்பிக்கையை பெற்றேன்”, என்கிறார் ஸூ கிம்.
“தங்களுக்கு நிகழ்ந்த அனைத்தையும் அவர்கள் சொல்ல நினைத்தார்கள். அவர்கள் செய்யும் இந்த தொழில் அழியும் தருவாயில் இருப்பதை கூற எண்ணினார்கள். கடலைப் பற்றிய அக்கறை யாருக்கும் இல்லை என்றும் அவர்கள் கூறினார்கள். வயதான காலத்தில் இந்த பெண்கள் கடுமையாக உழைப்பதை பரிதாபமாக காட்டபோவதில்லை என்று அவர்களுக்கு உறுதியளிக்க வேண்டியிருந்தது” என்று அவர் கூறினார்.
“அவர்கள் வேலை செய்ய விரும்புகிறார்கள். இது அவர்களை வலிமையாகவும் அதிகாரம் மிக்கவர்களாகவும் உணரச்செய்கிறது. அவர்களின் உண்மை நிலையை இந்த ஆவணப்படத்தில் காட்டப்போகிறேன். இவர்களை வயதானவர்களாக அல்லாமல் ஹீரோக்களாக கட்டப்போகிறேன், அவர்கள் எனது குடும்பம் போன்றவர்கள்”, என்று ஸூ கிம் தெரிவித்தார்.
பாதுகாப்பின்றி வேலை செய்யும் பெண்கள்
இந்த வேலையில் பல அபாயங்கள் உள்ளன. அதற்கு இவர்களிடம் எந்த பாதுகாப்பு வசதியும் இல்லை. இப்பொழுது கடலும் அதை சார்ந்திருக்கும் இந்த பெண்களின் வாழ்வாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
புவி வெப்பமடைதலின் விளைவாக கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும், ஆக்ஸிஜன் இல்லாமல் கடலின் ஆழத்துக்குச் செல்வது கடினமாக இருப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பானின் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து வெளிவரும் அணுக்கதிவீச்சு கொண்ட நீர் கடல் நீருடன் கலந்து மாசுபடுத்துவதையும், அதற்கு எதிரான போராட்டங்கள் பற்றியும் இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது. ஹேன்யோவை சேர்ந்த ஒருவரான சூன் டியோக் ஜங் என்பவர் இந்த விவகாரத்தை ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமை ஆணையத்தில் நேரடியாக முறையிட்டுள்ளார்.
இந்த கழிவுகள் வெளியாவதால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று கூறி சர்வதேச அணுசக்தி முகமை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் இதனை பெரும்பாலான விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்க சில விதிமுறைகளை இந்த ஹேன்யோ குழுவினர் பின்பற்றுகிறார்கள். இது அங்குள்ள சூழலைச் சமநிலைப்படுத்தி பாதுகாக்கிறது.
மூச்சை பிடித்து அவர்கள் கடல் ஆழத்திற்கு செல்லும் போது ‘இயல்பான தேவைக்கேற்ப மட்டுமே மீன் பிடிக்க முடியும்’ என்பதற்காகவே இவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் ஆழ் கடலுக்கு செல்கிறார்கள் என்றும் இவ்வாறு செய்வதால் அதிகப்படியான மீன் பிடித்தலை தவிர்க்க அவர்களுக்கு உதவுவதாகவும் ஸூ கிம் விளக்குகிறார்.
தற்போது மிகவும் குறைந்த அளவு இளம்பெண்கள் மட்டுமே இந்த பணிபுரிய விரும்புவது இந்த தொழிலுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
குறைந்த அளவிலே மக்கள் இந்த தொழில் செய்து வருவதால், 2000-ஆம் ஆண்டு இங்கு இந்த தொழிலுக்கான பயிற்சிப் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. அங்கு படித்தவர்களில் வெறும் 5% பேர் மட்டுமே ஹேன்யோ டைவர்கள் ஆகின்றனர்.
ஆனால் இந்தப் தொழில் முழுமையாக அழியவில்லை. இரண்டு புதிய ஹேன்யோ பெண்களை இந்தத் திரைப்படம் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இவர்கள் மற்றொரு தீவைச் சேர்ந்தவர்கள். இதில் ஒருவர் இந்த வேலையைச் செய்ய 30 வயதில் நீச்சல் கற்றுக்கொண்டுள்ளர்.
இந்த தொழில் புரியும் மூத்த பெண்கள் இவர்களை தங்கள் குழந்தைகளாகப் பார்க்கின்றனர்.
இந்தப் பெண்களால் ஈர்க்கப்பட்ட மலாலா, “இவர்களையும், இவர்கள் எவ்வாறு ஒன்றாக வேலை செய்கிறார்கள் என்பதையும் பார்க்கும் போது எனக்கு உலகில் உள்ள அனைத்து பெண்களும் செய்யும் கடும் வேலை நினைவுக்கு வருகிறது. குறிப்பாக இது ஆப்கானிஸ்தான் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகின்றது” என்றார்.
“இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையுடன் தன்னால் எதுவும் சாதிக்க முடியும் என்றும் நம்ப வேண்டும். அவரால் ஆக்ஸிஜன் இல்லாமல் 2-3 நிமிடங்கள் மூச்சை பிடித்து கடல் ஆழத்திற்கு வரை செல்ல முடியும் என்றும் கருத வேண்டும். எனக்கு நீச்சல் தெரியாது.இந்தப் படம் பார்த்த பிறகு ‘நானும் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று எனக்கு தோன்றியது”, என்று மலாலா கூறுகிறார்.