ஐநா நடத்தி வந்த பள்ளி மீது குண்டு வீச்சு.. 13 பேர் பலி! நாளுக்கு நாள் உக்கிரமாகும் இஸ்ரேல் தாக்குதல்

காசா: காசாவில் ஐநா நடத்தி வந்த பள்ளியின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போரில் இதுவரை 37,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டிணியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது. போர் தொடங்கி 269 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த போரின் நோக்கத்தை இஸ்ரேல் நிறைவேற்றியிருக்கிறதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான பதிலை இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்திருக்கிறார். “ஹமாஸ் என்பது ஒரு சிந்தனை, ஹமாஸ் ஒரு கட்சி, இது மக்களின் இதயங்களில் வேரூன்றியிருக்கிறது. ஹமாஸை ஒழிக்க முடியும் என்று நினைப்பது தவறு” என்று கூறியுள்ளார்.

போர் தொடங்கி 8 மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் இதனை ஒப்புக்கொண்டிருக்கிறது. ஹமாஸின் சுரங்கப்பாதைகள், அதன் முன்னணி வீரர்கள் மற்றும் தலைவரை அழித்து அவர்கள் பிடியில் உள்ள 240க்கும் மேற்பட்ட பணயகைதிகளை மீட்க இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால், 8 மாதங்கள் ஆன பின்னரும் இந்த இலக்கை எட்ட முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது. சூழல் இப்படி இருக்கையில் போர் காரணமாக சுமார் 80% பாலஸ்தீன மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர் என்று ஐநா மனித உரிமைகள் ஆணயம் தெரிவித்துள்ளது.

காசாவுக்கான ஐ.நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் சிக்ரிட் காக் இதனை தெரிவித்திருக்கிறார். “10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர் தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு குறித்து மிகுந்த அவநம்பிக்கையில் இருக்கின்றனர்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு போதிய உதவிகள் கிடைக்கவில்லை. எனவே போர் நிறுத்தம் அவசியம்” என்று காக் கூறியுள்ளார். அதேபோல தற்போது ஐநா நடத்தி வந்த பள்ளியின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஐநாவின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் நுசிராட்டில் பள்ளியை நடத்தி வருகிறது. இந்த பள்ளியின் மீதுதான் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

மருத்துவமனைகள், பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பது சர்வதேச போர் விதி. ஆனால், இந்த தாக்குதல் மூலம் விதியை இஸ்ரேல் மீறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதலால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பத்திரிகையாளர்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்க்கது.

நன்றி oneindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *