மும்பை: ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் இளம் நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் 2 பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்தார். மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற மனு பாக்கர், 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.
இதன் மூலமாக இந்திய வரலாற்றிலேயே ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 22 வயதாகும் மனு பாக்கர், ஒலிம்பிக் சாதனை மூலமாக பலருக்கும் ஊக்கம் கொடுத்துள்ளார். இந்தியாவில் இளைஞர்கள் பலரும் துப்பாக்கிச் சுடுதலை நோக்கி திரும்பி முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளார்.
மிதாலி ராஜ், சாய்னா நேவால், பிவி சிந்து, ஸ்மிருதி மந்தனா உள்ளிட்டோரை தொடர்ந்து மகளிர் விளையாட்டில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு மனு பாக்கர் சென்றுள்ளார். இந்த நிலையில் ஒலிம்பிக் தொடரின் தாக்கம் காரணமாக இந்திய அணியின் சீனியர் வீரர் ஒருவார் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியை தொடங்கியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் சீனியர் வீரரான அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் பேசுகையில், நான் இப்போது ஏர் ரைபிள் ஷூட்டிங் பயிற்சியை தொடங்கி இருக்கிறேன். இந்த ஒலிம்பிக் தொடரை பார்த்த போது, துப்பாக்கிச் சுடுதல் மீதான ஆர்வம் அதிகரித்துவிட்டது. 51 வயதில் துருக்கியைச் சேர்ந்த யூசுப் டிகேக்கை பார்க்கும் போது மிகப்பெரிய எனர்ஜி கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் வீரர்களை தான் மற்ற விளையாட்டு வீரர்கள் பின் தொடர்வார்கள். ஆனால் கடந்த ஒலிம்பிக் தொடருக்கு பின் இந்தியாவில் கிரிக்கெட்டை கடந்தும் பல்வேறு விளையாட்டுகளில் சூப்பர் ஸ்டார்கள் உருவாகியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் துப்பாக்கிச் சுடுதல் மீது ஈர்ப்பு ஏற்பட்டு பயிற்சியை தொடங்கி இருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.
2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடர் முதல் இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளில் அதிகளவிலான பதக்கங்களை வென்றுள்ளனர். ஏற்கனவே அதற்கான கட்டமைப்பு தலைநகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வரும் காலங்களில் மாவட்ட வாரியாகவும் கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி mykhel