நடிகர் நாகார்ஜுனா ஏரி-யை ஆக்கிரமித்து ‘என் கன்வென்ஷன் ஹால்’ என்கிற கட்டிடத்தை ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டியிருந்ததை தொடர்ந்து, ஹைதராபாத் மாநகராட்சி, இடித்து தரைமட்டம் ஆகியுள்ளது. இந்த சம்பவம் தற்போது தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, நடிகர் என்பதை தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒரு தொகுப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘குபேரன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் நாகார்ஜுனா ஹைதராபாத்தில் உள்ள தம்மிடி குந்தா ஏரியில் இருந்து, சுமார் 3.30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, பிரம்மாண்ட கன்வென்சன் ஹால் ஒன்றை கட்டியதாக பாஸ்கர் ரெட்டி உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்ததன் பேரில்… இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இந்த கன்வென்ஷன் ஹால் இருக்கும் 6.69 ஏக்கர் பரப்பளவில், சுமார் 3.30 ஏக்கர் வரை தம்பிடி குந்தா ஏரி நிலப்பரப்பை ஆக்கிரமித்து கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி அதிகாரிகள் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடித்து தரைமட்டம் ஆகினர்.
மேலும் பாதுகாப்பு கருதி, அந்த வழியாக செல்லும் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. செய்தியாளர்கள் உட்பட யாரையும் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட,3.30 ஏக்கர் நிலப்பரப்பில், நாகார்ஜுனா கட்டிய அதிநவீன உள்கட்டமைப்புடன் கொண்ட திருமண மண்டபங்கள் மற்றும் கல்யாண மால்கள் கட்டப்பட்டிருந்தது. பிரபலங்கள் பலரின் திருமணம் மற்றும் நிச்சயதார்த்த கொண்டாட்டங்கள் நடக்கும் இடமாக இது இருந்த நிலையில்… தற்போது இதை இடித்து தள்ளியதன் மூலம் பல லட்சம் நாகர்ஜூனாவிற்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நன்றி asianetnews