எல்லாரும் சிஎன்ஜி பைக்தான் வேணும்னு சொல்ல போறாங்க.. ரூ.95000 செலவு பண்ணா அதுல 75000 ரூபாவ 5ஆண்டுல எடுத்திரலாம்
பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நேற்றைய தினம் ஃப்ரீடம் 125 (Freedom 125) பைக்கை அறிமுகப்படுத்தியது. இது ஓர் சிஎன்ஜியில் இயங்கும் பைக்காகும். உலகின் முதல் சிஎன்ஜி பைக் இதுவே ஆகும். சிஎன்ஜியில் மட்டுமல்ல பெட்ரோலிலும் இந்த பைக் இயங்கும். இதற்காக பெட்ரோல் நிரப்பை ஓர் தனி டேங்க்கும், சிஎன்ஜியை நிரப்பிக் கொள்ள ஓர் 12.5 லிட்டர் கொள்ளளவுக் கொண்ட சிலிண்டரும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும். இந்த சிலிண்டரில் 2 கிலோ வரையில் சிஎன்ஜியை நிரப்பிக் கொள்ள முடியும்.
இதேபோல், பெட்ரோலையும் இந்த பைக்கில் 2 லிட்டர் வரை மட்டுமே நிரப்பிக் கொள்ள முடியும். இத்தகைய தரமான பைக்கையே இந்த பஜாஜ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாயிலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கை முக்கியமாக வர்த்தக துறையைக் கருத்தில் கொண்ட பஜாஜ் நிறுவனம் தயார் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
அவர்களுக்காக மட்டுமல்ல பெட்ரோல் செலவில் இருந்து தங்கள் பாக்கெட்டை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்காகவும் இந்த பைக்கை பஜாஜ் தயார் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இந்த பைக்கை பயன்படுத்தினால் ஐந்தாண்டுகளிலேயே இந்த பைக்கிற்காக செலவிட்ட தொகையில் இருந்து ரூ. 75 ஆயிரத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. பெட்ரோலுக்கு ஏற்படும் செலவை குறைத்தே அந்த தொகையை திரும்பிப் பெற்றுக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஃப்ரீடம் 125 சிஎன்ஜியில் இயங்கும்போது ஒரு கிலோவிற்கு 102 கிமீ மைலேஜையும், பெட்ரோலில் இயங்கும் போது 65 கிமீ மைலேஜையும் இந்த பைக் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய அதீத மைலேஜ் திறன் உங்களுக்கு 50 சதவீதம் வரை இயக்க செலவைக் குறைக்க உதவும். மேலும், ஐந்தாண்டுகளில் 75 ஆயிரம் ரூபாய் வரை உங்களால் சேமிக்க முடியும். இந்த சேமிப்பின் வாயிலாக பைக்கிற்காக போட்ட காசில் பாதி உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.
பஜாஜ் ஃப்ரீடம் 125 இந்தியாவில் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஃப்ரீடம் 125 என்ஜி04 டிரம் (Freedom 125 NG04 Drum), ப்ரீடம் 125 என்ஜி04 டிரம் எல்இடி (Freedom 125 NG04 Drum LED) மற்றும் ஃப்ரீடம் 125 என்ஜி04 டிஸ்க் எல்இடி (Freedom 125 NG04 Disc LED) ஆகியவையே அவை ஆகும். இதில் மலிவு விலை தேர்வாக ஃப்ரீடம் 125 என்ஜி04 டிரம் பிரேக் வேரியண்டே இருக்கின்றது. ரூ. 95 ஆயிரம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இது விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், டிரம் எல்இடி ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்துக்கும், டிஸ்க் பிரேக் எல்இடி லைட்டுகள் கொண்ட ஃப்ரீடம் 125 ரூ. 1.10 லட்சத்திற்கும் விற்பனைக்குக் கிடைக்கும்.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். எஞ்சினைப் பொருத் வரை ஃப்ரீடம் 125 பைக்கில் 125 சிசி, 4 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது பெட்ரோலில் இயங்கும் போது அதிகபட்சமா மணிக்கு 93.4 கிமீட்டர் வேகத்திலும், சிஎன்ஜியில் இயங்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90.5 கிமீ வேகத்திலும் பயணிக்கும்
மேலும், அதிகபட்சமாக 9.5 பிஎஸ் பவரையும், 9.77 என்எம் டார்க் ஆற்றலையும் இந்த பைக் வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, இந்த பைக்கில் மூன்று பேர்கூட தாராளமாக அமர்ந்து பயணிக்கலாம் என கூறும் அளவிற்கு அதிக நீளமான இருக்கை, ஃப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட திரை என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பெட்ரோல் மற்றும் மின்சார வாகனங்களுக்கு மாற்றாக ஃப்ரீடம் சிஎன்ஜி பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதற்கும் சிஎன்ஜி கார் மற்றும் ஆட்டோக்களைப் போலவே நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நன்றி oneindia.com