உத்தரப்பிரதேசம் மாநிலம், கர்ஹால் சட்டமன்றத் தொகுதிக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெறும் சூழலில் அங்கு ஒரு தலித் பெண் பயங்கரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று ஒன்பது தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஒரு தொகுதியாக மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹால் சட்டமன்றத் தொகுதிக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கர்ஹால் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், அதன்பிறகு 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் கர்ஹால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால், கர்ஹால் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அந்தத் தொகுதிக்கு வாக்குப் பதிவு நடந்துவருகிறது.
இந்தத் தொகுதியில் அகிலேஷ் யாதவின் உறவினர் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக தரப்பில் அவரின் மாமனார் அனுஜேஷ் யாதவ் போட்டியிடுகிறார். எனவே இந்தத் தொகுதியில் இருவரின் யார் வெற்றி பெறுவார் என்று உத்தரப்பிரதேச மக்கள் அதிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
1993 முதல் இந்த கர்ஹால் தொகுதி சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக இருந்துவருகிறது. இன்று வாக்குப் பதிவு நடந்துவரும் இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.
இப்படியான சூழலில் வாக்குப் பதிவான இன்று காலை கர்ஹால் தொகுதிக்குட்பட்ட கஞ்சரா ஆற்று பாலத்தின் அருகே ஆடைகள் அற்று, 20 வயது மதிக்கத்தக்க ஒரு தலித் பெண்ணின் உடல் சாக்கு பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பகுதிக்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து தலித் பெண் இறப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த மரண விவகாரத்தில் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பெயரிலும், அவரது சந்தேகத்தின் பெயரிலும், சமாஜ்வாதி ஆதரவாளர் பிரஷாந்த் யாதவ் மற்றும் மோகன் கட்டேரியா ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
பெண்ணின் மரணம் குறித்து அவரது தந்தை கூறுவதாவது; “மூன்று தினங்களுக்கு முன்பாக சமாஜ்வாதி கட்சியின் ஆதரவாளர் பிரஷாந்த் யாதவ் எனது வீட்டிற்கு வந்து சமாஜ்வாதி கட்சிக்கு வாக்கு செலுத்த சொன்னார். அப்போது என் மகள், அதனை மறுத்து நாங்கள் பாஜகவுக்கு தான் வாக்களிப்போம் என்று தெரிவித்தார். அதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த பிரஷாந்த் யாதவ், என்னையும் என் மகளையும் மிரட்டிவிட்டு புறப்பட்டு சென்றார். நேற்று (19-ம் தேதி) என் மகள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார். பிறகு அவரது செருப்பு பிரஷாந்தின் அலுவலகம் முன்பு கிடந்தது.” என்றார்.
மேலும், அந்தப் பெண்ணின் உறவினர்கள் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தக் கொலைக்குப் பின்னால் அரசியல் நோக்கம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர்.
அதேபோல், அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் ‘நேற்று (19-ம் தேதி) இருவர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர்’ என்று தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் போலீஸார் தற்போது பிரஷாந்த் யாதவ் மற்றும் மோகன் கட்டேரியா ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால், இந்த மரண விவகாரத்தில் யார் முதலில் உடலைக் கண்டது, தலித் பெண் நேற்று வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரது பெற்றோரோ அல்லது உறவினர்களோ காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனரா உள்ளிட்ட விஷயங்கள் தெளிவாக தெரியவில்லை.
ஆனால், இன்று கர்ஹால் தொகுதியில் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் வேளையில், ஒரு தலித் பெண்ணின் உடல் ஆடைகளற்று சாக்கு பையில் கண்டெடுக்கப்பட்டிருப்பதும், அவரது மரணத்திற்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவாளர் தான் காரணம் என்ற தகவலும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Nandri news18