உருவத்தில் சிறிதாக இருப்பது குறையல்ல, பெரிய கனவுகள் காணாமல் இருப்பதும், அவற்றை நிறைவேற்ற முயற்சி எடுக்காமல் இருப்பதுமே மிகப்பெரிய குறை” என்று கூறுகிறார் 19 வயதான, பாரா பேட்மிண்டன் வீராங்கனை நித்ய ஸ்ரீ சிவன்.
ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை, பாரிஸில் நடைபெறும் பாராலிம்பிக் 2024இல், மாற்றுத்திறனாளிகள், நிரந்தர காயமுற்றவர்கள் என 4,400 வீரர்/வீராங்கனைகள், 549 பதக்கங்களுக்காக 22 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர்.
அதில் பாரா பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார் தமிழ்நாட்டின் நித்ய ஸ்ரீ சிவன்.
‘11 வயது முதல் பேட்மிண்டனில் ஆர்வம்’
தனது 11வது வயதில் (2016) பேட்மிண்டன் விளையாடத் தொடங்கிய நித்ய ஸ்ரீ, மாற்றுத்திறனாளிகளுக்கென பாரா போட்டிகள் இருப்பதை 2019இல் தான் தெரிந்துகொண்டார்.
பாரிஸ் நகரில், நாளை (28 ஆகஸ்ட்) தொடங்கவுள்ள பாராலிம்பிக் போட்டிகளுக்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நித்ய ஸ்ரீ தொலைபேசி மூலமாக பிபிசி தமிழிடம் பேசினார்.
“அப்பாவும், அண்ணனும் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர்கள். ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டுமென அப்பா என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றதைப் பார்த்தபோது, எனக்கான விளையாட்டு பேட்மிண்டன்தான் என்பதை முடிவு செய்தேன்” என்கிறார் நித்ய ஸ்ரீ.
உள்ளூரில் ஒரு பேட்மிண்டன் பயிற்சி மையத்தில் இணைந்து விளையாடத் தொடங்கியவர், முதலில் இதை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்த்துள்ளார்.
“அப்பாவின் நண்பர் ஒருவர் பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டவர். அவர் தான் எனது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, பாரா போட்டிகள் குறித்து எடுத்துக் கூறினார். அதுவரை பொழுதுபோக்காக மட்டுமே பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நான், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினேன்” என்கிறார் நித்ய ஸ்ரீ.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, 2019ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா பேட்மின்டன் போட்டியில் நித்ய ஸ்ரீ தங்கம் வென்றார்.
“பின்னர் வேறு சில மாநில அளவிலான போட்டிகள், அதைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகள் என கலந்துகொள்ளத் தொடங்கினேன். அப்போது தான் இந்திய பாரா பேட்மிண்டன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌரவ் கண்ணாவின் அறிமுகம் கிடைத்தது” என்கிறார் நித்ய ஸ்ரீ.
இந்தியாவில் பாரா பேட்மிண்டன் விளையாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்தவர்களில் முக்கியமானவராக இவர் கருதப்படுகிறார். இவருக்கு, 2020இல் துரோணாச்சார்யா விருதும் (விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான விருது), 2024இல் பத்ம ஸ்ரீ விருதும் மத்திய அரசால் வழங்கப்பட்டது.
“முதன்முதலில் நித்ய ஸ்ரீ பேட்மிண்டன் விளையாடியதைப் பார்த்தபோது, யாரிடமும் அதிகம் பேசாத, ஆனால் மிகவும் திறமையான ஒரு வீராங்கனை என்பதைப் புரிந்துகொண்டேன். அவரது திறமைக்காகத் தான் இங்கு பேட்மிண்டன் பயிற்சி எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை அளித்தோம்” என்று பிபிசியிடம் கூறினார் கௌரவ் கண்ணா.