ஈரான் தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் போர் விமானங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க ராணுவ அமைப்புகள் தயாராக உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தெஹ்ரான்: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.
இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் இருந்து வெளியேறி உணவு, உடை, மருத்துவ வசதிகளின்றி பரிதவித்து வருகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பல்வேறு உலக நாடுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த மறுத்து வருகிறது.
இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறது. இதற்கிடையே ஒரு வாரத்துக்கு முன்பு ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே தனது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த இஸ்மாயில் ஹனியே, வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பின் ராணுவத் தளபதி முகமது தைஃப் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களும் ஈரானுக்கு பெரும் ஆத்திரத்தை உண்டாக்கியது. ”இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்ததற்கு இஸ்ரேல் பதில் சொல்லியே ஆக வேண்டும். இதற்காக இஸ்ரேலை கண்டிப்பாக பழிவாங்குவோம்” என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
ஈரான் அதிபராக இருந்து வந்த இப்ராஹிம் ரைசி, கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இது விபத்து என்று கூறப்பட்டாலும், இதற்கு பின்னால் இஸ்ரேல் இருக்கலாம் என்று ஈரான் சந்தேகித்து வருவதாக தகவல் வெளியானது. தற்போது ஹமாஸின் தலைவரும் கொல்லப்பட்டுள்ளதால் ஈரான் கடும் கோபத்தின் உச்சிக்கு சென்று இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் இன்று அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி வருவதால் மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் போர் விமானங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க ராணுவ அமைப்புகள் தயாராக உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
”எந்த சூழ்நிலையையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு ஈரான் பெரும் விலை கொடுக்க வேண்டியது வரும். தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்ளவும், பதிலடி கொடுக்கவும் எங்களுக்கு தெரியும்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஈரான் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்க ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
நன்றி kumudamnewslick Here To See More