கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் எளிமையாக நடந்த விழாவில் இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா அநுர குமார திசநாயக்கவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இலங்கை அதிபராக அனுர குமார திசநாயக்க பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பௌத்த குருக்கள் ஆசீர்வாதம் செய்தனர்.
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், அன்றைய தினம் மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றில் யாருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்காத நிலையில், முதல் முறையாக இரண்டாம் விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதியில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசநாயக்க, 55 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
44 விழுக்காடு வாக்குகளுடன் சஜித் பிரேமதாசா இரண்டாம் இடம் பிடித்தார். மூன்றாவது இடத்தை ரணில் விக்ரமசிங்க, நான்காவது இடத்தை நமல் ராஜபக்சவும், 5வது இடத்தை தமிழர்களின் பொது வேட்பாளரான அரியநேந்திரன் பாக்கியசெல்வமும் பிடித்தனர்.
அதிபராக பதவியேற்பு : இதற்கிடையே, இன்று இலங்கையின் 9வது அதிபராக அனுர குமார திசநாயக்க பதவியேற்றுக்கொண்டார். கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் எளிமையாக நடந்த விழாவில் இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா அனுர குமார திசநாயக்கவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, அனுர குமார திசநாயக்க பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளும் முன் பௌத்த குருக்களிடம் ஆசீர்வாதம் பெற்றார். பதவியேற்பு விழாவில் பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்மூலம் இலங்கையின் முதல் இடதுசாரி என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக, பதவியேற்பின்போது உரையாற்றிய அனுர குமார திசநாயக்க, “எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பணியாற்றுவேன். எங்கள் முன்னால் உள்ள சிக்கலான பணியைப் புரிந்துகொண்டு, மக்களின் விருப்பங்களை பூர்த்திசெய்யும் வகையில் பணியாற்றுவேன். சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமையே புதிய தொடக்கத்துக்கான அடித்தளம்.” என்று தெரிவித்திருந்தார்.
நன்றி news18