இனி எதிர்காலத்தில் மின் தடையே இருக்காது.. டான்ஜெட்கோவை 2 ஆக பிரிப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கா?
இயற்கை மின்சாரத்தை தயாரிப்பதற்காகவே தனியான அரசாங்க அமைப்பு உருவாவதால் எதிர்காலத்தில் மின்தடையே இருக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர்.சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகமான டான்ஜெட்கோவை 2 ஆக பிரிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவ்வாறு பிரிப்பதால் தமிழகத்தில் எதிர்காலத்தில் மின்தடை என்பதே இல்லாத சூழல் உருவாகும் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி செய்து, அதனை பகிர்ந்து வழங்கும் பணியை டான்ஜெட்கோ (Tangedco) செய்து வருகிறது. எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு மின் நுகர்வு இருக்கிறது என்பதை கணக்கெடுப்பதும், அதற்கேற்ப அந்த மாவட்டங்களுக்கு மின்சாரத்தை விநியோகிப்பதும் டான்ஜெட்கோவின் பணிகள் ஆகும். முன்பு தமிழ்நாடு மின்சார வாரியம் என்று இருந்த துறையை விரிவுப்படுத்தியே டான்ஜெட்கோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.இந்த சூழலில், டான்ஜெட்கோவின் பணிகளை எதிர்காலத் தேவையை கருத்தில்கொண்டு மேலும் விரிவுப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. பெருகும் மக்கள்தொகை, அதிகரிக்கும் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு மின்சாரத்தை கூடுதலாக உற்பத்தி செய்வது என அரசு முடிவு செய்துள்ளது. அதே சமயத்தில், அவ்வாறு கூடுதலாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு நிலக்கரியின் தேவையும், எரிபொருட்களின் தேவையும் இன்னும் பல மடங்கு அதிகமாகும். எனவே, இது பற்றி ஆலோசனை நடத்திய நிபுணர்கள், இயற்கையான முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிவு செய்தனர்.எனவே டான்ஜெட்கோவை இரண்டாக பிரித்து, அதில் ஒரு அமைப்பு, இப்போது உள்ளதை போல எரிபொருட்கள் அடிப்படையிலான மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், மற்றொரு அமைப்பு இயற்கையான வழிகளில் மின்சாரத்தை தயாரிக்கவும் பயன்படுத்தலாம் என அரசுக்கு ஆலோசனை கூறியது. அதன்படி, டான்ஜெட்கோவை இரண்டாக பிரிக்க ஒப்புதல் வழங்குமாறு தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.இந்நிலையில், இதனை பரிசீலித்த மத்திய அரசு, டான்ஜெட்கோவை இரண்டாக பிரிக்க இன்று அனுமதி வழங்கியது. அதன்படி, டான்ஜெட்கோவை தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் என்று ஒரு பிரிவாகவும், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என்று மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்படவுள்ளது. இதில் பசுமை எரிசக்தி கழகம், சாணம், குப்பை, காற்று, சூரிய ஒளி, கடல் அலை, உயிரி எரிபொருள் என இயற்கையாக கிடைக்கப்பெறும் வளங்களில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இவ்வாறு இயற்கையாக மின்சாரம் தயாரிக்க ஒரு அமைப்பே உருவாகுவதால், எதிர்காலத்தில் பசுமை மின்சாரத்தின் உற்பத்தி அதிகரித்து மின்தடை என்ற ஒன்றே இருக்காது என்ற சூழல் உருவாகும் என அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி samayam.com