சென்னை போன்ற பெரு நகரங்களிலும் இந்தத் திட்டத்தைக் கொண்டு செல்வது சவாலான ஒன்று.
திங்கள்கிழமை (ஆக.5) மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சென்னை சைதாப்பேட்டை நேரு நகரில் பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருந்து பெட்டகங்களை வழங்கினார்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவர், ’உலகிலேயே முதன்முறையாக மக்களைத் தேடி மருத்துவம் என்கிற ஒரு மகத்தான சீர்மிகு திட்டத்தை கிருஷ்ணகிரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் இதுவரை1.86 கோடி போ் பயனடைந்துள்ளனா்.
அவா்களில் உயா் ரத்த அழுத்த சிகிச்சைகள் 92.59 லட்சம் பேருக்கும், சா்க்கரை நோய் சிகிச்சைகள் 46.54 லட்சம் பேருக்கும், உயா் ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை நோய் சிகிச்சைகள் 41.39 லட்சம் பேருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் பயனாளிகளின் எண்ணிக்கை 2 கோடியை எட்டும்.
10,969 சுகாதார தன்னார்வலர்கள், 463 நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்கள், 463 இயன்முறை சிகிச்சையாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 2,892 செவிலியர்கள் இத்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும் சென்னை போன்ற பெரு நகரங்களிலும் இந்தத் திட்டத்தைக் கொண்டு செல்வது சவாலான ஒன்று.
சென்னையில் மட்டும் ரத்த அழுத்த நோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் 6,03,250 பேர், நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தவர்கள் 3,65,679 பேர், இரண்டும் சேர்ந்து இருந்தவர்கள் 3,03,203 பேர், இயன்முறை சிகிச்சை தேவைப்பட்டவர்கள் 14,066 பேர், நோய் ஆதரவு சிகிச்சை 8,038, டயாலிசிஸ் பைகள் வழங்கப்பட்டவர்கள் 77 பேர் பயனடைந்துள்ளனர்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சென்னையில் இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்தாலும், அடுக்குமாடி குடியிருப்பவா்களை அணுக முடியாத நிலை உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவா்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பினால் 104 என்ற அவசர உதவி எண்ணை அழைத்தால் உடனடியாக தேவையான உதவிகள் செய்து தரப்படும். அதேபோன்று, தொழிலாளா்களைத் தேடி மருத்துவம் திட்டமும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது, என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இந்த நிகழ்வில், சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையா் ஜெயசந்திர பானு ரெட்டி, பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், மாநகராட்சி சுகாதார அலுவலா் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.
நன்றி indianexpress